ஆனைவிழுந்தான் சரணாலய விவகாரம் – சந்தேகநபர்களுக்கு பிணை!
புத்தளம், முந்தலம் பகுதியில் ஆனைவிழுந்தான் சரணாலயத்தின் சதுப்பு நிலப்பகுதி பெக்கோ இயந்திரங்கள் மூலம் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வர்த்தகர் மற்றும் பெக்கோ இயந்திர சாரதி ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சிலாபம் மாவட்ட நீதிபதி மஞ்சுல ரத்நாக்கவால் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, சந்தேகநபர்களை தலா 100 இலட்சம் ரூபாய் சரீர பிணை அடிப்படையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 27 ஆம் திகதி ஆரச்சிகட்டுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
வனவிலங்கு திணைக்களத்தின் புத்தளம் உதவி பணிப்பாளரினால் ஆரச்சிகட்டுவ பொலிஸில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு ஒன்றிற்கமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
முந்தலம் – கீரியன்கள்ளிய பிரதேசத்தை சேர்ந்த பெக்கோ இயந்திர சாரதி மற்றும் உடப்புவை, பிங்கட்டிய பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய வர்த்தகர் ஆகியோரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அனைத்து சாட்சிகளையும் நீதிமன்றில் முற்படுத்துமாறும் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறும் மாவட்ட நீதிபதி ஆரச்சிகட்டுவ பொலிஸாருக்கு உத்தரவிட்டார்