ஐபிஎல் 2020: தனிமைப்படுத்துதல் நாட்களை 3-ஆக குறைக்கவும்- ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வலியுறுத்தல்

வீரர்களின் தனிமை காலத்தை 3 நாட்களாக குறைக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வலியுறுத்தியுள்ளது

ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள், பணியாளர்கள் என அனைவரும் கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக முதலில் 6 நாட்கள் தனிமைப்படுத்தவார்கள். பின்னர் கொரோனா பரிசோதனை முடிவை பொறுத்தே அவர்கள் போட்டியில் பங்கேற்க இயலும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) அறிவித்து இருந்தது.

 

அதன்படி அனைத்து வீரர்களும் அதை பின்பற்றி தற்போது கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு வளையத்தில் (பயோ செக்யூர் பபுல்) உள்ளனர்.

 

இங்கிலாந்து- ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் இன்று நடக்கிறது. இந்த போட்டி முடிந்த பிறகுதான் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் துபாய் புறப்பட திட்டமிட்டுள்ளனர்.

6 நாட்கள் தனிமை காலத்தில் இருந்தால் ஆஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்கள் ஐ.பி.எல்.லில் தொடக்க ஆட்டங்களில் விளையாட முடியாது.

 

இதைத்தொடர்ந்து தனிமை காலத்தை 6 நாட்களுக்கு பதிலாக 3 நாட்களாக குறைக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

ஸ்டீவ் சுமித், வார்னர், ஆரோன் பிஞ்ச், ஸ்டாய்னிஸ், ஹசில்வுட் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்களும், மோர்கன், பட்லர், ஆர்சர் உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்களும் இன்றைய போட்டிக்கு பிறகு ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு செல்வார்கள்.

 

இதில் ஸ்மித் ராஜஸ்தான் அணிக்கும், வார்னர் ஐதராபாத் அணிக்காக கேப்டனாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.