ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வாட்ச் சீரிஸ் 6 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனம் தனது டைம் ஃபிளைஸ் நிகழ்வில் புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய வாட்ச் மாடலில் இரத்தத்தில் உள்ள காற்றோட்ட அளவுகளை கணக்கிடும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது 15 நொடிகளில் இரத்தத்தில் உள்ள காற்றோட்ட அளவுகளை கணக்கிட்டு தெரிவிக்கும் திறன் கொண்டுள்ளது.
இதற்கென வாட்ச் மாடலில் உள்ள சென்சார்கள் மற்றும் சிவப்பு நிற மின்விளக்குகள் பயன்படுத்தப்படுவதாக ஆப்பிள் தெரிவித்து இருக்கிறது. இரத்தத்தில் உள்ள காற்றோட்ட அளவுகளை காண்பிக்க பிரத்யேக செயலியை ஆப்பிள் வாட்ச் கொண்டுள்ளது.
புதிய வாட்ச் மாடலில் உடல் ஆரோக்கியம் பற்றிய விவரங்களை மிகத்துல்லியமாக வழங்கும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் பல்வேறு மருத்துவ குழுமங்களுடன் இணைந்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மாடலில் எஸ்6 ரக பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
இது முந்தைய பிராசஸரை விட வேகமாக இருப்பதுடன் பல்வேறு அதிநவீன அம்சங்களை வழங்குகிறது. இத்துடன் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே அம்சம் முன்பைவிட மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் புதிய வாட்ச் முன்பை விட அதிக வாட்ச் ஃபேஸ்களை கொண்டுள்ளது.
புதிய சீரிஸ் 6 மாடலுடன் ஆப்பிள் நிறுவனம் வாட்ச் எஸ்இ மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. ஆப்பிள் எஸ்இ மாடலில் எஸ்5 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
சர்வதேச சந்தையில் புதிய ஆப்பிள் வாட்ச் புளூ அலுமினியம், நியூ கிராஃபைட் மற்றும் பிராடக்ட் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. புதிய நிறம் தவிர ஆப்பிள் வாட்ச் மாடல்களுக்கென பல்வேறு பிரத்யேக பேண்ட் மற்றும் ஸ்டிராப்களில் கிடைக்கிறது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மாடலின் விலை 399 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 29367 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடல் துவக்க விலை 279 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 20535 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.