20 ஐ நிறைவேற்றுவதில் கோட்டாபய அரசு மும்முரம்

20 ஐ நிறைவேற்றுவதில் கோட்டாபய அரசு மும்முரம்

19 ஆம் திருத்தத்தை நீக்கி அதற்கும் முன்னர் காணப்பட்ட நிலைமைக்கு செல்வதே 20 ஆவது அரசியல் அமைப்பின் மூலம் இடம் பெறும் விடயம் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (14) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

20 ஐ நிறைவேற்றிக்கொள்ள பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இலகுவில் பெற்றுக்கொள்வது உறுதி எனவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் 09 பேர் கொண்ட குழுவொன்று 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது. நான் நினைக்கின்ற வகையில் திங்கட்கிழமை இந்தக் குழு கூடும்.குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கான இறுதித் திகதி குறிப்பிடப்படவில்லை.

மக்களின் கோரிக்கைகள், யோசனைகளுக்கு செவிகொடுத்து அதனை செய்வதற்கு நாங்கள் பின்வாங்க மாட்டோம். 20ஆவது திருத்தச் சட்டத்தை நான் தயாரிக்கவில்லை. 19ஆவது திருத்தம் நீக்கப்பட்டு அதற்கு முன்னர் இருந்த திருத்தத்தைப் போல அமுல்படுத்துவதே அதில் இடம்பெறும். அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் சட்டவாக்கப் பிரிவினால் பிரேரணையாக 20ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா அரசியலமைப்பின்படி அமைச்சரவைதான் சட்டவாக்கம் செய்வதற்கான அதிகாரம் கொண்டிருக்கிறது. திருத்தச் சட்டமூலம் இறுதிப்படுத்தப்படுவதற்கான பிரிவு எனக்கு கீழ் உள்ள நீதியமைச்சில் இருப்பதால்தான் நான் தொடர்புபட்டுள்ளேன். எனது புதிய விடயங்கள் இந்த 20ஆவது திருத்தத்தில் இல்லை. இது 18ஆவது திருத்தச் சட்டத்திற்கு சமமானதாகும்.

இந்த திருத்தச் சட்டமூலத்தை அங்கீகரிப்பதற்கான பெரும்பான்மை பலம் எமக்கு இருக்கிறது. தற்போதும் கூட எமக்கு 150 உறுப்பினர்கள் உள்ளனர். இன்னும் 15 உறுப்பினர்கள் வெளியே இருந்து அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கும் எமது கட்சியில் இணையவும் விருப்பம் வெளியிட்டிருக்கின்றனர்'

மேலும் நாட்டு மக்கள் நாட்டில் உள்ள சட்டத்திற்கு பணிந்து நடக்க வேண்டும் எனவும் அவ்வாறு செயற்படாதவர்களுக்கு எதிராக கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் கூறினார்