மின்னஞ்சல் பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள “சைபர்” எச்சரிக்கை

மின்னஞ்சல் பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள “சைபர்” எச்சரிக்கை

அண்மைக்காலமாக சைபர் மோசடிக்காரர்களினால் மின்னஞ்சல் ஊடாக பாவனையாளர்களின் தகவல்களைத் திருடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை கணினிசார் அவசரநிலைமைகள் தொடர்பான தயார்நிலை குழு எச்சரித்திருக்கின்றது.

ஏற்கனவே நன்கறிந்த மின்னஞ்சல் முகவரிகளில் இருந்து தொடர்பற்ற செய்திகள் கிடைக்கப்பெறுவதாக இணையப்பாவனையாளர்களிடம் இருந்து பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக தயார்நிலை குழு தெரிவித்திருக்கின்றது.

இவ்வாறான மின்னஞ்சல்கள் பெரும்பாலும் மைக்ரோசொப்ட் ஒஃபிஸ் சார்ந்த இணைப்பு ஒன்றைக் கொண்டிருக்கின்றது. பாவனையாளர்கள் அந்த இணைப்பை அழுத்தும் பட்சத்தில், 'மாக்ரோ' செயலியை பயன்படுத்துமாறு கோரப்படும்.

சைபர் மோசடிக்காரர்கள் இந்த 'மாக்ரோ' செயலியின் ஊடாக தீங்கிழைக்கும் கணினி புரோகிராம்களை வடிவமைத்து, அவற்றை மைக்ரோசொப்ட் ஒஃபிஸ் கோப்பு வடிவில் பாவனையாளர்களுக்கு அனுப்பிவைக்கின்றார்கள்.

எனவே பாவனையாளர்கள் அந்த மாக்ரோ செயலிக்குள் நுழைவார்களேயானால் அதனூடாக அவர்களுடைய கணினியுடன் இணைப்பை ஏற்படுத்தி, அதிலுள்ள தகவல்களைத் திருடக்கூடிய வாய்ப்பு சைபர் மோசடியில் ஈடுபடுபவர்களுக்குக் கிடைக்கின்றது என்று கணினிசார் அவசரநிலைமைகள் தொடர்பான தயார்நிலை குழு தெரிவித்திருக்கின்றது.

எனவே ஏற்கனவே நன்கறிந்த மின்னஞ்சல் முகவரியைப் போன்று காண்பித்து, அதனூடாக அனுப்பப்பட்டிருக்கும் சந்தேகத்திற்கிடமான இணைப்புக்களை அழுத்துவதனை பாவனையாளர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மேற்படி தயார்நிலை குழு எச்சரிக்கை செய்திருக்கிறது.