வினு விமல் வித்யா: கொஞ்சம் முறுக்கு... நிறைய கொரியன் சீரியல்!

வினு விமல் வித்யா: கொஞ்சம் முறுக்கு... நிறைய கொரியன் சீரியல்!

வினுவிடமிருந்து மொபைல் அழைப்பு வந்தவுடன் மகிழ்ச்சியாக எடுத்தார் வித்யா. “உனக்கு ஆயுசு நூறு. இப்பதான் உன்னை நினைச்சேன் வினு. அதுக்குள்ளே என்னைக் கூப்பிட்டுட்டே... வீடியோ காலில் கூப்பிடேன்... பார்க்கணும் போல இருக்கு!”

“அக்கா, பால்கனிக்கு வந்து எட்டிப் பாருங்க.”

பால்கனியிலிருந்து எட்டிப்பார்த்த வித்யா, “அடடா... வினுவும் விமலும் வந்திருக்கீங்களா... வீட்டுக்கு வாங்க. ஏன் அங்கேயே நின்னுகிட்டுருக்கீங்க...” என்றார் குதூகலத்துடன்.

“வித்யாக்கா, மாஸ்க் மாட்டிக்கிட்டு நீங்க கீழே வாங்க. வீட்டுக்கு வர்ற ஐடியா ரெண்டு பேருக்கும் இல்ல. இப்படி கார்டனில் உட்கார்ந்து பேசிட்டுக் கிளம்பிடறோம்” என்றாள் வினு பொறுப்பாக.

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, ஜூஸ் பாட்டில், ஸ்நாக்ஸுடன் கார்டனுக்கு வந்தார் வித்யா.

“நேர்ல பார்த்து எவ்வளவு மாசமாச்சு... விமல் கொஞ்சம் சதை போட்டுட்ட மாதிரி இருக்கு. வினு அப்படியேதான் இருக்கா” என்று சொல்லிக்கொண்டே அமர்ந்தார் வித்யா.

``நான் வீட்டு வேலைகளைச் செஞ்சு செஞ்சே ரெண்டு கிலோ குறைஞ்சிட்டேன் வித்யாக்கா. வினுதான் ரெண்டு கிலோ ஏறிட்டா... நீங்க அப்படியே இருக்கீங்க!” என்று சிரித்தாள் விமல்.

“கொரோனா காலம் கொடுமையா போயிட்டு இருக்கு... எங்க பார்த்தாலும் கொரோனா வந்துச்சுன்னு கேள்விப் பட்டுட்டே இருக்கேன். எப்போ கொரோனாகிட்டயிருந்து விடுதலையாவோமோ தெரி யலை...” - இது வித்யா.

“கொரோனாகிட்டயிருந்து கூட விடுதலையாகிடலாம் வித்யாக்கா. இந்த அடிப்படை வாதிகளிடமிருந்து பெண்களுக்கு எப்போ விடுதலை கிடைக்கும்னு தெரியலை. ஆப்கானிஸ்தானில் 15 நாள்கள் இடைவெளியில் இரண்டு பெண்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகியிருக்காங்க. 45 வயசு ஃபவ்ஸியா கூஃபி, தலிபான்களின் ஆட்சியில் மருத்துவப் படிப்பைப் பாதியில் கைவிட்டவர். தலிபான்கள் ஒடுக்கப்பட்ட பிறகு, அரசியலுக்கு வந்தார். துணை சபாநாயகர்வரை உயர்ந்திருந்திருக்கார். தலிபான்களிடம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திட்டுத் திரும்பும் வழியில் சுடப்பட்டு, மருத்துவமனையில் இருக்கார். இப்போ நடிகையும் தயாரிப்பாளருமான சபா சாஹர் அடையாளம் தெரியாத நபரால் சுடப்பட்டிருக்கார். இவர் ஆப்கானிஸ்தானின் முதல் பெண் இயக்குநர் என்ற சிறப்பையும் பெற்றவர். இப்போ இவரும் மருத்துவமனையில் இருக்கார்” என்ற விமல் தண்ணீரை எடுத்து ஒரு வாய் குடித்தாள்.

 ஜென்னட்

ஜென்னட்

“சபா சாஹரை ஏன் சுடணும்?”

“இவர், ஆப்கானிஸ்தான் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடி வருகிறவர். அதைத் தாங்கிக்க முடியாத அடிப்படை வாதிகள்தான் இப்படிப் பண்ணிருக்கணும்” என்று விமல் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, வினு பேச்சை ஆரம்பித்தாள்.

“கருக்கலைப்பு என்பது அடிப்படை மனித உரிமைதானே... ஆனா, தேவையற்ற கர்ப்பங்களைக் கலைக்கிறதுக்குச் சட்டப்படி அனுமதி இல்லாததால சில நாடுகளில் பெண்கள் ஆபத்தான வழிகளில் கருக்கலைப்பைச் செய்றாங்க. இதனால பல பெண்கள் தொற்றுக்குள்ளாகி, இறந்து போறாங்க. கென்யாவில் ஒவ்வொரு வருஷமும் முறையற்ற கருக்கலைப்புகளால் 2,500 பெண்கள் உயிரிழக்கிறாங்க. இந்த நவீன யுகத்தில் இதுபோன்ற மரணங்களை எல்லாம் தடுக்க வேண்டாமா?”

“நீ சொல்றது சரிதான் வினு. கண்டிப்பா தடுக்கணும். பிரேசில் நாட்டில்கூட கருக்கலைப்புக்கு அங்கீகாரம் இல்லை. பத்து வயசுப் பெண் குழந்தையை அவளோட அங்கிள் நாலு வருஷமா சிறார் வதை பண்ணிட்டிருந்திருக்கான். இப்போ அந்தக் குழந்தை கர்ப்பமா இருக்கு. விஷயம் வெளியில் தெரிஞ்சு 32 வயசு குற்றவாளியைக் கைது பண்ணியிருக்காங்க. குழந்தைக்குக் கருக்கலைப்பு செய்ய அனுமதி கிடைக்கல. பெண்ணுரிமைப் போராட்டக்காரர்கள் குழந்தைக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கி, கருக்கலைப்பு செய்யணும்னு போராடுறாங்க. ஆனா, அடிப்படைவாதிகள் செய்யக் கூடாதுன்னு எதிர்ப்போராட்டங்களை நடத்துறாங்க. அதனால 900 கி.மீ தொலைவில் இருக்கும்

ஒரு பகுதிக்குக் குழந்தையை அழைச்சிட்டுப்போய் கருக்கலைப்பு செஞ்சிருக்காங்க” என்று படபடத்தார் வித்யா.

“பத்து வயது குழந்தையால ஒரு குழந்தையைப் பெத்து, வளர்க்க முடியுமா? நினைச்சாலே அடிவயிறு கலங்குது. இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் பெண்கள் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடிக்கிட்டு இருக்கணுமோ தெரியலை.”

“நீ சொல்றதும் சரி விமல். அமெரிக்காவில் ஓட்டுரிமைக் காகப் பெண்கள் 72 வருஷங்கள் போராடினாங்க.

1920-ம் ஆண்டுலதான் 19-வது அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, ஓட்டுரிமை வழங்கப்பட்டது. இது அமெரிக்கப் பெண்கள் ஓட்டுரிமை பெற்ற 100-வது ஆண்டு. ஒருபக்கம் ஓட்டுரிமை பெற்ற நூற்றாண்டை அமெரிக்கப் பெண்கள் கொண்டாடிக்கிட்டு இருக்காங்க” என்று பெருமூச்சுவிட்ட வித்யா, தொடர்ந்தார்.

“விண்வெளி வீராங்கனை ஜென்னட் எப்ஸ், 2021-ம் ஆண்டு சர்வதேச விண்வெளி மையத்தில் `ஸ்டார்லைனர்-1' பணிக்காகச் செல்ல இருக்கார். விண்வெளி மையத்துக்குச் செல்லும் முதல் ஆப்பிரிக்க - அமெரிக்கப் பெண் ஜென்னட்தான். இவருடன் சுனிதா வில்லியம்ஸும் ஜோஸ் காஸடாவும் போறாங்க. 49 வயது ஜென்னட் ஏற்கெனவே ஒரு முறை விண்வெளி மையத்துக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தவர் என்பதால் இந்த முறை மகிழ்ச்சிக்கடலில் மூழ்கியிருக்கார். வரலாற்றில் இடம்பிடித்துவிட்ட ஜென்னட்டை வாழ்த்துவோம்” என்று வித்யா பேசிக்கொண்டிருந்தபோது மொபைல் சிணுங்கியது. இரண்டு நிமிடங்களில் திரும்பி விடுவதாகச் சொல்லிவிட்டு, வீட்டுக்கு ஓடினார் வித்யா.

வினு விமல் வித்யா: கொஞ்சம் முறுக்கு... நிறைய கொரியன் சீரியல்!

“என்ன வினு, நம்ம தோனி இப்படிச் சட்டுபுட்டுன்னு ஓய்வை அறிவிச்சிட்டாரே... ரெண்டு நாளா சாப்பிடலையா?!”

“வருத்தம்தான், அதுக்காகச் சாப்பிடாத அளவுக்கு வருத்தமெல்லாம் இல்லை. அனுஷ்கா - விராட் கோலி ஜோடிக்கு ஜனவரியில் குழந்தை பிறக்கப்போகுது. இந்தக் கொரோனா காலகட்டத்திலும் கல்யாணம் நடக்குது. குழந்தை பிறக்குது. மனிதர்களுக்கு நம்பிக்கை அதிகம்தான் இல்லையா, விமல்?”

“அதுதானே வாழ்க்கையே. சரி வினு. ஏதாவது படம் பார்த்தியா?”

``படம் எதுவும் பார்க்கலை விமல். ஆனா, தினமும் நாலு தடவை `சூஃபியும் சுஜாதாவும்’ மலையாளப்படத்தில் வரும் ரெண்டு பாடல்களைக் கேட்டுக்கிட்டிருக்கேன். எத்தனை தடவை கேட்டாலும் எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்கவே இல்ல” என்று சிரித்தாள் வினு.

“தேவ் மோகனின் தீவிர ஃபேனாயிட்டியா வினு? கொரோனாவால அவருக்கு அடுத்த படம் இன்னும் கிடைக்கலையாம்” என்றபடியே வந்து உட்கார்ந்தார் வித்யா.

“பிடிக்கும்தான். அதுக்காக ஒரே ஒரு படத்திலேயே எல்லாம் இந்த வினு யாருக்கும் ஃபேனாக மாட்டாள்!”

“நான் `ஆர்யா’ வெப்சீரிஸ் பார்த்தேன். ரொம்ப வருஷத்துக்குப் பிறகு, சுஷ்மிதா சென்னை ஸ்க்ரீனில் பார்த்தேன். 44 வயசுலயும் சிக்குன்னு இருக்காங்க. மூணு குழந்தைகளுக்கு அம்மாவா நடிச்சிருக்காங்க. நீ பார்த்தியா வினு?”

“நான் எல்லாம் கொரியன் சீரியல்களுக்கு மாறி ரொம்ப வருஷமாச்சு. இங்கே எதையும் பார்க்கிறதில்லை. அங்கே ஹீரோக்களைப் பெண்கள் விரும்புற மாதிரி காட்டறாங்க. பெண்களின் ப்ளஸ், மைனஸோட ஏத்துக்கிற ஹீரோக்களாக உருவாக்கறாங்க. நீங்க ரெண்டு பேரும் பார்த்தீங்கன்னா, அப்புறம் கொரியன் சீரியல்களுக்கு ஃபேனாயிடுவீங்க” என்று வினு சொன்னவுடன்,

``ஐயையோ... நாங்கள் பார்க்க மாட்டோம்'' என்று விமலும் வித்யாவும் ஒரே நேரத்தில் சொன்னார்கள்.

“உங்களுக்கு எல்லாம் அந்த அருமை புரியாது. வித்யாக்கா, நீங்க செஞ்ச முறுக்கு வாயில் போட்டதும் கரைஞ்சிருச்சு. கொஞ்சம் வீட்டுக்கு எடுத்துட்டுப் போறேன். சரி, நாம கிளம்புவோமா?” என்று நேரத்தைப் பார்த்தாள் வினு.

“அடுத்த தடவை எங்க வீட்டுக்கு வாங்க” என்று எழுந்தாள் விமல்.

வித்யா கையசைக்க, இருவரும் ஆளுக்கு ஒரு ஸ்கூட்டியில் பறந்தார்கள்.

(அரட்டை அடிப்போம்!)