ஆனைவிழுந்தான் ஈரவலய விவகாரம் தொடர்பிலான கள ஆய்வு ஆரம்பம்
புத்தளம் ஆனைவிழுந்தான் ரம்சார் ஈரவலய புகலிட நிலத்தை சட்டவிரோதமாக துப்புரவு செய்வதற்காக இயந்திரம் பெறுவதற்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரபல அரசியல்வாதி ஒருவரின் சகோதரரை கைது செய்யும் நடவடிக்கைக்காக காவல்துறை குழுக்கள் பல ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வர்த்தகரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 27ஆம் திகதி ஆனைவிழுந்தான் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் ஒரு பகுதியை இயந்திரம் ஒன்றின் மூலம் அழிப்பதற்கு ஆலோசனை வழங்கிய வர்த்தகரும் இயந்திர சாரதி ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஆனைவிழுந்தான் ரம்சார் ஈரவலய பகுதிக்கு இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலர் பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.