மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகரவுக்கு நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியபிரமாணம் செய்ய முடியுமா..?
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகரவினால் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியபிரமாணம் செய்து கொள்ள முடியாது என இதுவரையில் எழுத்துமூலம் தமக்கு அறிவிக்கப்படவில்லை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்
இந்த விடயம் தொடர்பில் வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டுளளார்.
அத்துடன் இந்த விடயம் தொடர்பான வரையறையை உயர்நீதிமன்றமே வழங்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகள் மற்றும் நாடாளுமன்ற வரப்பிரசாதங்களை பாதுகாப்பது தமது கடமை எனவும் அதற்காகவே தாம் தெரிவாகியுள்ளதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகரவிற்கு நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் மேற்கொள்ள முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் நீதியமைச்சுக்கு கடிதம் மூலம் முன்னதாக அறிவித்திருந்தது.
குறித்த அறிவித்தல், நீதியமைச்சின் ஊடாக நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற மனித கொலை தொடர்பில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகரவிற்கு அண்மையில் இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
எனினும் நடைபெற்று முடிந்த பொது தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் அவர் இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று வெற்றிபெற்றிருந்தார்.
எனினும் பிரேமலால் ஜயசேகரவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் மேற்கொள்ள முடியுமா என்பது தொடர்பில் கடந்த காலங்களில் விவாதம் ஏற்பட்டிருந்தது.
பிரேமலால் ஜயசேகரவிற்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை தொடர்பில் மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அவரை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு ஆளுங்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரியிருந்தனர்.
இதற்கமை கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டிருந்த சபாநாயகர், எதிர்வரும் 8 ஆம் திகதி பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அறிவித்திந்தார்.
இவ்வாறான நிலையில் பிரேமலால் ஜயசேகர தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நீதியமைச்சிடம் வினவியுள்ளார்.
இதற்கமைய பிரேமலால் ஜயசேகரவிற்கு நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் மேற்கொள்ள முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.