கைபேசிமூலம் இடம்பெறும் பணபரிமாற்றம் - பொலிஸார் எடுக்கவுள்ள நடவடிக்கை
போதைப்பொருள் வர்த்தகத்திற்கென அதிகளவில் பணப்பரிமாற்றம் மேற்கொள்வதற்கு கையடக்கத்தொலைபேசி பயன்படுத்தப்படுகிறது. கையடக்கத்தொலைபேசி வலையமைப்புக்கள் மூலம் தொடர்புகொண்டு போதைப்பொருள் வர்த்தகம் அதிகளவில் இடம்பெறுவதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் அவ்வாறான வழிமுறையை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில் எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேல் மாகாணத்தில் செயற்படும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களையும் போதைப்பொருள் வர்த்தகத்தையும் தடுப்பது தொடர்பில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் நேற்றைய தினம் ஆராயப்பட்டது.
இது தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்காவில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்துள்ளது.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களில் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது.
இந்நிலையில், போதைப்பொருள் வர்த்தகம், கப்பம் பெறுதல், கொள்ளைச் சம்பவங்கள், கொலைகள், சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருளை கடத்துதல் போன்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து இதன்போது பொலிஸ் அதிகாரிகளுக்கு தேவையான தகவல்கள் வழங்கப்பட்டன.