வயிற்றில் கல்லைக்கட்டி கடலில் வீசுமாறு கோட்டாபயவே கூறினார் என சாட்சியம் வழங்குமாறு அழுத்தம்...!

வயிற்றில் கல்லைக்கட்டி கடலில் வீசுமாறு கோட்டாபயவே கூறினார் என சாட்சியம் வழங்குமாறு அழுத்தம்...!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவிற்கு அமையவே காணாமல் போன ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொடவை கொலை செய்ததாக தெரிவிக்குமாறு தனக்கு குற்றப்புலனாய்வு பிரிவு அழுத்தம் கொடுத்ததாக புலனாய்வு பிரிவின் ஓய்வு பெற்ற அதிகாரி ரவீந்திர ரூபசேன தெரிவித்தார்.

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்...

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மதுபானம் அருந்த வைத்து சாட்சியங்களை பெற்றுக்கொண்டனர்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் அழுத்தத்திற்கு அமைய ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச் சென்று கிரித்தலை இராணுவ முகாமில் தடுத்து வைத்து பின்னர் அக்கறைப்பற்று கடறப்பரப்பில் உடலில் கல்லை கட்டி கடலில் மூழ்கச்செய்ததாக சாட்சியம் வழங்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவினர் பலவந்தப்படுத்தினர்.

தாம் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் தனது வீட்டிற்கு வருகை தந்தகுற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளை அழைத்து செல்ல முயற்சித்தனர். அந்த சந்தர்ப்பத்தில் ஒரு பெண் காவல் துறை உத்தியோகத்தரேனும் வருகைதந்திருக்கவில்லை.

இதன்போது வருகை தந்திருந்த அதிகாரி ஒருவர் தனது புதல்வனின் நெற்றியில் உத்தியோகப்பூர்வ துப்பாக்கியை வைத்து அம்மாவும் மகனும் எங்களுடன் வருகை தராவிட்டால் இதுவே நடக்கும்.

அத்துடன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் உதவி காவல் துறை பரிசோதகர் பிரேமதிலக்க தன்னை நிசாந்த டி சில்வாவின் அறைக்கு அழைத்து சென்று பலவந்தமாக மதுபானம் அருந்தச்செய்வதற்கு திட்டமிட்டனர்.

இதன்போது மிகவும் சுமூகமான முறையில் பயப்பட வேண்டாம் - நான் சொல்வதை செய்யுங்கள் ஷானி அபயசேகர நல்லவர் ரணில் விக்ரமசிங்க, காவல் துறை மா அதிபர் மங்கள ஆகியோர் எங்களுடனேயே இருக்கின்றனர்.

ஆகையினால் கோட்டாபயவின் பணிப்புரைக்கமைய பிரகீத் எக்நெலிகொடவின் வயிற்றில் கல்லை கட்டி கடலில் வீசியதாக கூறுங்கள். என பலவந்தப்படுத்தினர்.

அவ்வாறு கூறினால் பலகோடி ரூபாய் பணம் தருவதாகவும், அமெரிக்கா செல்ல வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதாகவும் தெரிவித்தனர்.