
கல்வி அமைச்சரின் முழுமையாக விளக்கம்...!
இந்த ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
இது குறித்து எமது செய்தி பிரிவு வினவிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுபடுத்தும் நடவடிக்கையின் அடிப்படையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் வழமை போன்று பரீட்சையை நடாத்த முடியாத நிலை ஏற்ட்டுள்ளது.
இது தொடர்பில் நேற்று பிற்பகல் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
அத்துடன் பாடசாலைகளின் மூன்றாம் தவணை டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி நிறைவடைவதோடு அடுத்த ஆண்டுக்கான முதலாம் தவணை ஜனவரி மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி முதல் நொவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதன் காரணமாக குறித்த பரீட்சை பிற்போடப்பட்டிருந்தது.
சுகாதார வழிமுறைகளை பின்பற்றி குறித்த பரீட்சையை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஒகஸ்ட் மாதத்தில் வழங்கப்படவிருந்த இரண்டாம் தவணை விடுமுறை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாகி நொவம்பர் மாதம் 16 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
அத்துடன் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைவாக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை இரண்டு கட்டங்களாக ஆரம்பிப்பதற்கு அண்மையில் கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது.
இதற்கமைய, செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் 6 ஆம் தரம் முதல் 13 ஆம் தரம் வரையில் காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரையில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அத்துடன் செப்டம்பர் 8 ஆம் திகதி முதல் சகல தரங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.