தென்னிலங்கையை அதிர வைத்த விக்னேஸ்வரனின் உரை! சபாநாயகர் எடுத்த முடிவு

தென்னிலங்கையை அதிர வைத்த விக்னேஸ்வரனின் உரை! சபாநாயகர் எடுத்த முடிவு

நாடாளுமன்றத்தின் கன்னியுரையில் விக்னேஸ்வரன் ஆற்றிய உரை தொடர்பில் ஆராயப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்த விக்னேஸ்வரன், தமிழர்கள் பூர்வீக குடிகள் என்றும், தமிழர்களின் இருப்புத் தொடர்பிலும் விளக்கமாக உரையாற்றியிருந்தார்.

இது தொடர்பில் தென்னிலங்கையில் காரசாரமான விவாதங்கள் எழும்பின. இதனையடுத்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பின மனுசநாணயக்கார விக்னேஸ்வரனின் உரையை நாடாளுமன்ற குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் நாடாளுமன்றம் கூடிய போது, மனுசநாணயக்கார வெளியிட்ட கரிசனைகளை சபாநாயகர் நிராகரித்துள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது,

இன்று நாடாளுமன்றம் கூடியவேளை விக்னேஸ்வரனின் கருத்துக்களுக்கு பதிலளிக்கவேண்டும் என கோரிய மனுசநாணயக்கார பிளவுபட்ட இலங்கையை விக்னேஸ்வரன் ஊக்குவிக்கின்றார் என தெரிவித்தார்.

எனினும் இதனை நிராகரித்த சபாநாயகர் விக்னேஸ்வரனின் உரை குறித்து ஆராயப்படும் என தெரிவித்தார். எனினும் சபாநாயகரின் நிலைப்பாட்டை ஏற்க மறுத்த நாணயக்கார விக்னேஸ்வரனின் நிலைப்பாட்டிற்கு தனது எதிர்ப்பை வெளியிட்டார்.

இதேவேளை இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கருத்து சுதந்திரத்தினை நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் மதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அதேபோன்று, அவர் சபாநாயகரின் நிலைப்பாட்டை வரவேற்றார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.