இம்சை அதிபர் 23ஆம் சிரிகேசி!
கல்லுக்குள் ஈரம் என்பதுபோல் ஜொள்ளுவிடுவதிலும் மன்னர் நம்ம ட்ரம்ப்.
டங் ஸ்லிப்பாகி உளறுவது, முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவது, ஜொள்ளு விடுவது, உதார் விடுவது, பேசும்போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் விடுவது என அமெரிக்கர்களுக்கு ஃபுல் என்டர்டெயின்மென்ட் தருவது ட்ரம்ப்பின் சிறப்புப் பணி. இதோ சில சிதறல்கள்...
கட்டதுரைக்குக் கட்டம் சரியில்ல!
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை வாழ்த்துச்செய்தியாக கிறித்தவர்கள் யாருக்கும் அனுப்ப மாட்டார்கள். ஆனால், ‘ஹேப்பி குட்ஃப்ரைட் டே டு ஆல்’ என வாழ்த்து ட்வீட் போட்டு ‘மனுஷனாய்யா நீ...?’ என நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்டார்.
ஆப்பிள் சி.இ.ஓவான டிம் குக்கிற்கு நன்றி தெரிவிக்கும் போது டிம் குக்கை, ‘டிம் ஆப்பிள்’ என உளறினார். “ஓ... அப்போ மத்தவங்க பேரெல் லாம் ஜெஃப் ‘அமேசான்’, பில் ‘விண்டோஸ்’, மார்க் ‘ஃபேஸ்புக்’ தானோ?” என நெட்டிசன்கள் கலாய்க்க, டிம்மும் கூலாக தன் ட்விட்டர் அக்கவுன்ட்டில் ஆப்பிள் படத்தை மாற்றிவைத்துக் கலாய்த்தார். சில நாள் களிலேயே அமேசானின் ஜெஃப் பெஸாஸையும், ஜெஃப் போஸோ எனப் புதுப் பெயரிட்டு அழைத்து டெரர் கூட்டினார்.
இலங்கை குண்டுவெடிப்பில் 138 பேர் பலியானதை ட்விட்டரில் 138 மில்லியன் பேர் பலியானதாகக் குறிப்பிட்டு ஒருகணம் நம் லப்-டப்பை எகிற வைத்தார்.
இதெல்லாம் ரொம்ப ஓவரு!
அகதிகள் என்றால் அண்ணாத்தேவுக்கு அலர்ஜி. அதிலும் மெக்ஸிக்கன் என்றால் மீடியா முன் டண்டணக்கா தான்.
“நாங்கள் எப்போதும் மனிதாபிமானத்தோடு இருக்கவே விரும்புகிறோம். இங்கு சட்டரீதியாக அகதிகளாக வாழ அவர்கள் முற்படுவதும் நல்ல விஷயம்தான். ஆனால், அதைவிட அமெரிக்காவுக்கு நல்ல விஷயம் நான் அவர்களை உள்ளே வரவிடாமல் தடுப்புச் சுவர் கட்டுவது! மெக்ஸிகன்ஸ் போதை மருந்து கொண்டு வருகிறார்கள். குற்றங்களைக் கொண்டு வருகிறார்கள். அவர்களால் பாலியல் தாக்குதலும் நடக்கிறது. அதனால்தான் சொல்கிறேன். சுவரெழுப்பவதற்கான செலவையும் மெக்ஸி கோவிடமே வசூல் செய்வேன்!” என்றார்.
சிரிய நாட்டின் அகதிகள் பற்றி உச்சபட்ச கடுப்பில், “2 லட்சம் அகதிகளில் பெரும் பாலும் ஆண்களாகவே இருக்கிறார்கள். அதுவும் கட்டுமஸ்தான போர்வீரர்கள்போல. பெண்கள் எல்லாம் எங்கே போனார்கள்..? இவ்வளவு பெரிய உடலை வைத்துக்கொண்டு தாய் நாட்டுக்காக சண்டைக்குப் போகலாம் இல்லையா? ஏன் இங்கு வருகிறீர்கள்?” என குரூர நக்கலடித்தார்.
அது வேற வாய்... இது வேற வாய்!
“நான் சீனாவை வைத்து அந்த நபரை சீக்கிரத்தில் ஒழித்துவிடுவேன்... மோசமான வழிகள் நிறைய இருக்கின்றன. அவர் ரொம்பக் கேவலமான ஆள்!” இப்படி அமெரிக்க மீடியாவில் யாரைக் கழுவிக்கழுவி ஊற்றினாரோ அவர் நாட்டுக்கே போய் கைகுலுக்கி, பேச்சுவார்த்தை நடத்தினார் ட்ரம்ப். அவர்தான் கிம் ஜாங் உன், வடகொரியாவின் அதிபர்!
“கிம் என்னை வயதானவர் என்று கிண்டலடித்திருக்கிறார். நானும் அவரை குள்ளமானவர், குண்டானவர் என நக்கலடிக்க முடியாதா என்ன?” என்று ‘எதிர்க்கட்சிக்காரனின் தலைகளைக் கொய்து தோரணம் கட்டிவிடுவேன்’ எனும் வடிவேலுபோலவே பேசினார்.
சில நாள்களிலேயே, “கிம் பேசும்போது அந்த நாட்டு மக்கள் உட்கார்ந்த நிலையிலும் எழுந்து உட்காருவது பொறாமையாக இருக்கிறது!” என்று பாராட்டிப் பேசினார்.
சரி, சீனாவுடனாவது உறவு சீராக இருக்கிறதா என்றால், கொரோனா பரவ ஆரம்பித்த புதிதில், “சீனா கொரோனா ஒழிப்பில் எங்களுக்கு உதவும் என நம்புகிறேன்!” என்றார். சில நாள்களில் கொரோனா உச்சம் தொட, ‘சைனீஸ் வைரஸ்’ என கொரோனாவுக்குப் புதுப்பெயர் வைத்து ஜின் பிங்கைக் கடுப்பேற்றினார்.
அம்புட்டு ஏன், “ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொடுக்காவிட்டால் இந்தியா பின்விளைவுகளைச் சந்திக்கும்!” என்று தன் தோஸ்து மோடிக்கே மிரட்டல் விடுத்தார். மறுநாள் மலேரியா மருந்தை மோடி அனுப்பி வைத்ததும், “இனியநண்பருக்கு நன்றி!” என்று சலாம் வைத்தார்.
ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு!
கல்லுக்குள் ஈரம் என்பதுபோல் ஜொள்ளுவிடுவதிலும் மன்னர் நம்ம ட்ரம்ப்.
அயர்லாந்து நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட லியோவரத்கர் என்பவருக்கு ட்ரம்ப் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் மீடியாக்கள் அங்கு கூடியிருந்தனர். அதில், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கேத்ரினா பெர்ரியும் ஒருவர்.
அப்போது தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த ட்ரம்ப், திடீரென பெர்ரியை அழைத்து, “பார்த்தீர்களா... உங்கள் நாட்டுப்பெண்ணின் சிரிப்பு மிக அழகாகவும் செக்ஸியாகவும் இருக்கிறது. இவர் உங்களை நன்றாக கவனித்துக்கொள்வார் என நம்புகிறேன்” என லியோவரத்கரிடம் தெரிவிக்க, கூச்சத்தில் அந்தப் பெண் நெளிந்தார்.
“வயகரா அற்புதமான விஷயம். சிகிச்சை எடுத்தாலோ அல்லது உடலில் வேறு பிரச்னை இருந்தாலோ அதைப் பயன்படுத்துங்கள். ஆனால், எனக்கு அது தேவைப்பட்டதே இல்லை..! நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி!” - ப்ளே பாய் இதழுக்காகத்தான் இப்படித் திருவாய் மலர்ந்திருக்கிறார்.
பாடி லாங்குவேஜிலும் வடிவேலுவுக்கே டஃப் கொடுப்பார் ட்ரம்ப். முகத்தை அஷ்டகோணலாக்கி சேட்டை செய்வது, ரொமான்டிக் லுக் விடுவது, ஐ ஆம் பாவம் என்பதுபோல தலையைத் தொங்கப்போட்டுக் கொள்வது, உதட்டை அநியாயத்துக்குப் பிதுக்கி காமெடி பண்ணுவது, காது குடைவது, வேதாளம் அஜீத்போல உர்ரென்று இருந்த மூஞ்சியில் அப்படியே சிரிப்பைச் சிதறவிடுவது என மனிதர் பின்னியெடுப்பார்.
டிக்டாக் தடை தொடர்பாக சமீபத்தில் அவர் உதிர்த்த முத்து, “டிக்டாக் மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு உளவுத்தகவல்கள் கிடைக்கின்றன.”
பாவம்தான் அமெரிக்கா!