இந்தியா விரைவில் தன்னிறைவு பெறும் – சுதந்திர தின விழாவில் பிரதமர்

இந்தியா விரைவில் தன்னிறைவு பெறும் – சுதந்திர தின விழாவில் பிரதமர்

நாடு தன்னிறைவு பெறுவதே ஒவ்வொரு இந்தியனின் தாரக மந்திரம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

74வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துகள்.

பல லட்சம் பேரின் தியாகத்தால் உருவானது சுதந்திர தினம். விடுதலைக்காக தியாகங்களை செய்தவர்களை இன்று நினைவுகூர்வோம்

இன்று கண்ணெதிரே சின்ன சின்ன குழந்தைகளை காண முடியவில்லை. கொரோனா அனைவரையும் வீட்டுக்குள் தடுத்து விட்டது. கொரோனாவுக்கு எதிராகப் போராடும் அனைவரையும் பாராட்டுவோம். பலர் தங்கள் உயிரையும் பறிகொடுத்துள்ளனர்

130 கோடி மக்களின் சகிப்புத்தன்மையும் உறுதியும் கொரோனாவை வெல்லும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நட்டின் பல பகுதிகளில் மக்கள் மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாடு என்ற ஒற்றுமையுணர்வுடன் நாம் சவால்களை வெல்வோம்

அடுத்த ஆண்டு நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடுவோம். எதிர்காலத்திற்கான புதிய கண்ணோட்டம் வேண்டும். புதிய சபதங்களையும் நாம் ஏற்க வேண்டும்

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவை என்றும் நிரந்தரமாக ஆள கனவு கண்டார்கள். இந்தியாவின் பலம் அதன் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டில் உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நமது ஒற்றுமையுணர்வை குறைவாக மதிப்பிட்டனர். பிரிட்டனின் விரிவாக்க கனவை இந்தியா ஒற்றுமையால் முறியடித்தது.

இந்தியர்கள் ஒருபோதும் தியாகத்திற்கு அஞ்சியதில்லை. கொரோனாவை வெல்லவும் 130 கோடி இந்தியர்கள் உறுதி மேற்கொண்டுள்ளனர்.

சொந்தக் காலில் நிற்கும்படி பிள்ளைகளுக்கு பெற்றோர் அறிவுரை கூறுவதுண்டு. இன்று நாம் சுயசார்புடன் சொந்தக் காலில் நிற்கும் வலிமை பெற்றுள்ளோம். சுயசார்பு என்பதே ஒவ்வொரு இந்தியரின் தாரக மந்திரமாக உள்ளது.

உலகம் இந்தியாவிடம் நிறைய எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளது. இந்தியா தனது ஆன்ம பலத்தால் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது

இன்றைய உலக நாடுகள் ஒன்றையொன்றை சார்ந்து நிற்கும் நிலை உள்ளது. நமது சுயசார்பால் நாம் உலகிற்கே உதவியாக இருக்க முடியும்

இந்தியா உலகைத் தலைமை தாங்கி வழிநடத்திச் செல்ல வேண்டும்.  இந்திய விவசாயிகளுக்கு எனது நன்றி. வேளாண்துறையை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

விவசாயம் முதல் விண்வெளி ஆய்வு வரை இந்தியா முன்னேறி வருகிறது. திறன் மேம்பாட்டில் நாம் கவனம் செலுத்த வேண்டும். படைப்பாற்றலை வளர்க்க வேண்டும்.

கொரோனா வைரஸை எதிர்கொள்ள நமது இளைஞர்கள் புதிய கண்டுபிடிப்புகளை தந்தனர். உலகத்தால் உதவ முடியாத நிலையில் நமக்கான மருத்துவ சாதனங்களை நாமே உருவாக்கிக் கொண்டோம். உள்நாட்டு உற்பத்தியை நாம் அதிகரிக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.