சுவிஸ் தூதரக அதிகாரிக்கு 48 மணி நேர கெடு! நாட்டை விட்டு வெளியேற வடகொரியா அதிரடி உத்தரவு

சுவிஸ் தூதரக அதிகாரிக்கு 48 மணி நேர கெடு! நாட்டை விட்டு வெளியேற வடகொரியா அதிரடி உத்தரவு

வடகொரியாவில் உள்ள சுவிட்சர்லாந்தின் தூதரக அலுவலகத் தலைவரை 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு வடகொரியா உத்தரவிட்டுள்ளது. அத்துடன், சுவிஸ் தூதரக அலுவலகத்தையும் மூடுமாறு கோரியுள்ளது.

சுவிட்சர்லாந்து, வடகொரியாவின் சோங்டோவான் (Songdowon) சர்வதேச சிறுவர் முகாமுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவின் வெளிவிவகார அமைச்சு, சுவிஸ் தூதரக அலுவலகத் தலைவர் சில்வைன் அஸ்டியரை (Sylvain Astier) அழைத்து, அவரை நாட்டில் வரவேற்கப்படாத நபராக அறிவித்ததுடன், 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என அறிவித்துள்ளது.

மேலும், தூதரக அலுவலகத்தை மூடுவதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பையும் சுவிஸ் அதிகாரியிடம் வழங்கியுள்ளது.

உக்ரைனின் ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்து சிறுவர்களை அழைத்து வந்து, அவர்களுக்கு ரஷ்ய ஆதரவு கருத்துக்களைப் புகட்டுவதில் சோங்டோவான் சிறுவர் முகாம் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதன் அடிப்படையில் சுவிட்சர்லாந்து அந்த முகாமுக்கு எதிராக தடைகளை விதித்துள்ளது. இதனை வடகொரியா தனது நாட்டுக்கு எதிரான பகைமை நடவடிக்கை என்றும், இறையாண்மைக்கு எதிரான செயல் என்றும் கண்டித்துள்ளது.

குறிப்பாக, வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங், சுவிட்சர்லாந்தின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், தற்போது தூதரக அதிகாரியை வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோய் காரணமாக 2020ஆம் ஆண்டு மூடப்பட்டிருந்த சுவிட்சர்லாந்தின் தூதரக அலுவலகம், கடந்த ஒக்டோபர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.