புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18 வயது மாணவியின் இறுதி ஆசை; பிரிந்த உயிர்!
சீனாவில் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18 வயது மாணவி ஒருவர், தனது பாடசாலைத் தோழர்களுடன் ஒருமுறையாவது வகுப்பறையில் அமர்ந்து பாடம் கற்க வேண்டும் என்ற கடைசி ஆசையை நிறைவேற்றிய இரண்டு நாட்களுக்குப் பின்னர் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவைச் சேர்ந்த யாவ் யிங்பேய் (Yao Yingbei) என்ற 18 வயது மாணவி இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் .
குறித்த மாணவி, நோயின் தீவிரம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் அவரால் வழக்கம்போல் பாடசாலைக்குச் சென்று கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், தனது பாடசாலைத் தோழர்களுடன் மீண்டும் ஒருமுறையாவது வகுப்பறையில் அமர்ந்து பாடம் கற்க வேண்டும் என்பதே தனது கடைசி ஆசை என அவர் தெரிவித்துள்ளார்.
இரு நாட்களில் பிரிந்த உயிர்
மாணவியின் இந்த விருப்பத்தை அறிந்த ஆசிரியர்கள், அதனை நிறைவேற்றுவதற்காக விசேட ஏற்பாடுகளை மேற்கொண்டதற்கமைய, அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையிலேயே தற்காலிக வகுப்பறை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அங்கு அவரது வகுப்புத் தோழர்களும் வரவழைக்கப்பட்டு, ஆசிரியர்களால் வழக்கமான வகுப்பறையைப் போன்ற சூழலில் பாடங்கள் நடத்தப்பட்டுள்ளன.
நீண்ட நாட்களுக்குப் பின்னர் தனது நண்பர்களுடன் ஒரே இடத்தில் அமர்ந்து பாடம் கற்கும் வாய்ப்புக் கிடைத்ததால், மாணவி மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்.
வகுப்பில் பங்கேற்ற அவர், அதற்குப் பின்னர் இரண்டு நாட்களிலேயே உயிரிழந்துள்ளார். மாணவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஆசிரியர்கள் மேற்கொண்ட இந்த மனிதநேயச் செயலும், பாடசாலைத் தோழர்களுடன் மீண்டும் கல்வி கற்க வேண்டும் என்ற அவரது இறுதி விருப்பமும் பலரது மனங்களையும் நெகிழச் செய்துள்ளன.