வாகன இறக்குமதி வரிக் கொள்கை தொடர்பில் விசேட கலந்துரையாடல்
இலங்கையின் வாகன இறக்குமதிச் செயன்முறை, வாகன இறக்குமதி தொடர்பான வரிக்கொள்கைகள், மின்சார வாகனங்களின் (EV) பயன்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களைச் சுங்கத்திலிருந்து விடுவிப்பதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க தலைமையில் பாராளுமன்றத்தில் இக்கூட்டம் நடைபெற்ற போதே இது குறித்து ஆராயப்பட்டது.
இதில் இலங்கைச் சுங்கத் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, வாகன இறக்குமதித் தளர்த்தப்பட்டதன் பின்னர் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை, அவற்றின் பெறுமதிகள் மற்றும் அவற்றுக்கு அறவிடப்படும் வரி முறைமைகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.
வாகன இறக்குமதியின் போது எஞ்சின் கொள்ளளவு, CIF பெறுமதி மற்றும் உற்பத்தி வரிகள் உள்ளடங்கலாகப் பல்வேறு வரி கூறுகளின் அடிப்படையில் வரியைக் கணக்கிடும் செயன்முறை சிக்கலானதாக இருப்பது குறித்தும், சுங்க மதிப்பீடுகள் தொடர்பில் எழும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மேலும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களைச் சுங்கத்திலிருந்து விடுவிக்கும் போது, சுங்கத் திணைக்களத்திற்கு மேலதிகமாகப் பல அரச நிறுவனங்களிடமிருந்து அனுமதி பெற வேண்டியிருப்பதால் ஏற்படும் தாமதங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம் உள்ளடங்கலாகத் தொடர்புடைய அரச நிறுவனங்களுக்கு இடையே ஒருங்கிணைந்த டிஜிட்டல் கட்டமைப்பு இல்லாத காரணத்தால், அனுமதிகளைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் ஒருங்கிணைப்புச் சிக்கல்கள் குறித்தும் ஆராயப்பட்டது.
இத்தாமதங்களால் துறைமுகங்களில் கொள்கலன்களைத் தடுத்து வைக்க நேரிடுவதால், இறக்குமதியாளர்கள் மேலதிக தாமதக் கட்டணங்களையும் களஞ்சியக் கட்டணங்களையும் செலுத்த வேண்டியுள்ளதாக அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
எனவே, தொடர்புடைய அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பைப் பலப்படுத்தி, இறக்குமதிப் பொருட்களை விடுவிக்கும் செயன்முறையைத் துரிதப்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், மின்சார வாகனங்களின் இறக்குமதி மற்றும் பயன்பாடு தொடர்பான ஒழுங்குமுறை மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக, மின்சார வாகனங்களின் மின்கலங்கள் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட பின்னர், அவற்றை அகற்றுவதற்கு அல்லது மீள்சுழற்சி செய்வதற்கு நாட்டில் தெளிவான பொறிமுறை ஒன்று இல்லாமை குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் போதே, அவற்றின் மின்கலங்களின் ஆயுட்காலம் முடிவடைந்த பின்னர் அவற்றை அகற்றுவது அல்லது மீள்சுழற்சி செய்வது தொடர்பான பொறுப்பை இறக்குமதியாளர்கள் அல்லது உற்பத்தியாளர்களிடமிருந்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும், மின்சார வாகனங்கள் மற்றும் அவற்றின் மின்கலங்களுக்குத் தேவையான தரநியமங்கள் மற்றும் சுங்க வரிகளைக் கணக்கிடும் போது பயன்படுத்தப்படும் HS குறியீடுகளை (HS Codes) முறையாக அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் ஆராயப்பட்டது.
மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காகத் தற்போதைய வரிக்கொள்கைகளை எளிமைப்படுத்துவதுடன், சாதாரண மக்களும் கட்டுப்படியான விலையில் அவற்றைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் வரிக்கொள்கைகளைத் தயாரிக்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
குறிப்பாக, மின்சார வாகனங்களை மின்னேற்றம் (Charging) செய்யும் போது தேசிய மின்கட்டமைப்பில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைப்பதற்காக, சூரிய சக்தி மற்றும் மின்சார சேமிப்பு மின்கலக் கட்டமைப்புகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதற்கமைய, மின்சார வாகன இறக்குமதி மற்றும் பயன்பாட்டிற்கான வரிச் சலுகைகள் மற்றும் கொள்கை ரீதியான ஊக்குவிப்புகளை அறிமுகப்படுத்துதல், சர்வதேச தரங்களுக்கு அமைய சுங்க வகைப்படுத்தல் மற்றும் HS குறியீடுகளைப் புதுப்பித்தல், அத்துடன் பாவனையிலிருந்து நீக்கப்படும் மின்கலங்களைச் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் முகாமைத்துவம் செய்வதற்கான முறையான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல் ஆகியவற்றின் அவசியம் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.