கனடாவிலிருந்து இந்தியா வந்த காதலிக்கு நடந்த அதிர்ச்சி ; வயதை அறிந்ததும் பின்வாங்கிய காதலன்?

கனடாவிலிருந்து இந்தியா வந்த காதலிக்கு நடந்த அதிர்ச்சி ; வயதை அறிந்ததும் பின்வாங்கிய காதலன்?

கனடாவிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீற்றர்கள் பயணம் செய்து இந்தியக் காதலரைத் திருமணம் செய்துகொள்ள வந்த 61 வயதுப் பெண்ணுக்கு ஏமாற்றமே மிஞ்சிய சம்பவம் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

திருமணத்துக்கு இளைஞர் மறுப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையிலான விவகாரம் பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளது.

கனடாவைச் சேர்ந்த குறித்த பெண்ணுக்கும், ஹரியானா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்த நிதின் என்ற இளைஞருக்கும் சுமார் ஓராண்டுக்கு முன்னர் டேட்டிங் செயலி ஒன்றின் ஊடாக அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் சாதாரணமாகத் தொடங்கிய இவர்களது உரையாடல் நாளடைவில் காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ளத் தீர்மானித்துள்ளனர்.

இதற்கமைய, சுற்றுலா விசாவில் இந்தியாவுக்குப் பயணித்த அந்தப் பெண், கடந்த 11ஆம் திகதி டெல்லியைச் சென்றடைந்துள்ளார்.

விமான நிலையத்துக்குச் சென்ற நிதின், அவரை வரவேற்று ராஜஸ்தான் மாநிலத்தின் நீம்ரானா பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு நிதினின் உறவினர்கள் வீட்டில் இருவரும் இரண்டு நாட்கள் தங்கியிருந்ததுடன், திருமணம் தொடர்பான பேச்சுகளும் இடம்பெற்றுள்ளன.

எனினும், பெண்ணின் வயது சுமார் 61 எனத் தெரியவந்ததைத் தொடர்ந்து, அவரைத் திருமணம் செய்துகொள்ள நிதின் மறுப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஓராண்டாக இணையவழியில் தொடர்ந்த காதல், நேரில் சந்தித்த சில நாட்களிலேயே முறிவைச் சந்தித்துள்ளது.

இதையடுத்து, கடந்த நவம்பர் 13ஆம் திகதி குறித்த பெண் கனடா தூதரகத்தைத் தொடர்புகொண்டு சம்பவம் தொடர்பான விவரங்களைத் தெரிவித்துள்ளார்.

தூதரகம் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற நீம்ரானா பொலிஸார், இருவரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தனியார் பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றும் நிதினிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை, கனடாவைச் சேர்ந்த பெண் கோட்புட்லியில் உள்ள கோர் சென்டர் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

திருமணக் கனவுடன் கனடாவிலிருந்து இந்தியா சென்ற பெண், இறுதியில் பொலிஸ் விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.