திருச்சி சிறப்பு முகாமிலுள்ள முன்னாள் போராளிகளை நாடுகடத்துவதைத் தடுக்க நடவடிக்கை

திருச்சி சிறப்பு முகாமிலுள்ள முன்னாள் போராளிகளை நாடுகடத்துவதைத் தடுக்க நடவடிக்கை

தமிழகத்தின் திருச்சி சிறப்பு முகாமில் இருந்து முன்னாள் பேராளியான 50 வயதான கிருஷ்ணகுமார் கந்தசாமி, இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டமை தமிழக அரசியலிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் தண்டனை அனுபவித்த பின்னர் சிறப்புமுகாமில் உள்ள சுபாஸ்கரன் உட்பட்ட முன்னாள் போராளிகளை நாடுகடத்துவதை தடுப்பதற்கான நகர்வுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள முன்னாள் போராளிகள் தொடர்பான விடயங்களை கையாண்டுவரும் சென்னை உயர் நீதிமன்ற சட்டவாளரும், தமிழ் சட்டவாளர் பேரவை நிறுவனருமான ஜோன்சன் நேற்று தமிழக அமைச்சர் வன்னியரசு மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசிய நிலையில் இந்த விடயங்கள் குறித்து அவர் ஐ.பி.சி தமிழுக்கு அவரது கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

இதுதொடர்பில் அவர் தெரிவித்ததாவது, ''ஓரிரு நாட்களுக்கு முன்னர் கிருஷ்ணகுமார் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு இலங்கையில் ஏதோவொரு தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

 

முறையாக நாட்டுக்குள் வந்தவர்கள்

இதேநேரம் சுபாஸ்கரனைப் பொறுத்தவரை அவர் நாடு கடத்தலுக்கு ஒத்துழைக்காத காரணத்தால் இன்றளவும் அவர் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.

திருச்சி சிறப்பு முகாமிலுள்ள முன்னாள் போராளிகளை நாடுகடத்துவதைத் தடுக்க நடவடிக்கை | Krishnakumar Srilanka Caused Vibrations Tamilnadu

அண்மையில் இந்தியாவில் குடியேற்ற மற்றும் அயல்நாட்டு சட்டம் 2025என புதிய சட்டமொன்று இயற்றப்பட்டுள்ளது.

அந்தச் சட்டத்தின்படி,2015 ஜனவரி 09இற்கு முதல் இந்தியாவுக்குள் நுழைந்து இந்தியாவில் அடைக்கலம் கேட்டு பதிவு செய்துகொண்ட இலங்கைத் தமிழர்களை சட்டவிரோத குடியேறிகளாக கருதக்கூடாது.

அயல்நாட்டவர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கூடாதென அந்த சட்டத்தின்படி வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது. இது இலங்கைத் தமிழர்களுக்கு ஓரளவு பாதுகாப்பானது.

சுபாஸ்கரனும் அவரது குடும்பத்தினரும் முறையாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள்.

எனவே அண்மையில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி சுபாஸ்கரனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தியும் சுபாஸ்கரனை நாடு கடத்தாது சிறப்பு முகாமிலிருந்து விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் நாம் தொடர்ந்து போராடி வருகிறோம்.

எனவே அவர் சிறப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்படுவார் என்று நாங்கள் நம்புகிறோம்” என தெரிவித்திருந்தார்.