அரசு மரியாதையுடன் இசையமைப்பாளர் தேவாவின் உடல் இன்று நல்லடக்கம்!

அரசு மரியாதையுடன் இசையமைப்பாளர் தேவாவின் உடல் இன்று நல்லடக்கம்!

இசையுலகிற்கு ஆற்றிய சேவையை சிறப்பிக்கும் வகையில் இசையமைப்பாளர் தேவாவின் இறுதிப்பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்த நிலையில், இன்று பிற்பகல் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.

தமிழ் திரையுலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக இசைத்துறையில் கோலோச்சி வந்தவர் தேவா. சென்னையில் மயிலாப்பூரைச் சேர்ந்த தேவநேசன் சொக்கலிங்கம் என்ற இயற்பெயரை கொண்ட இவர், 1986 ஆம் ஆண்டு மாட்டுக்கார மன்னாரு படம் மூலம் இசையமைப்பாளராக தடம்பதித்தார்.

தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். 

75 வயதான இவர், அண்மையில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சாருகேசி என்ற படத்திற்கு இசையமைத்தார். இந்நிலையில் சென்னையில் தியாகராய நகரில் தனது வீட்டில் இருந்த தேவாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

உடனே, வடபழனியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

பின்னர் தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. தொடர்ந்து அரசியல் கட்சியினர் மற்றும் திரை பிரபலங்கள் தேவாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். சென்னை தியாகராய நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ’தேனிசை தென்றல்’ தேவாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். தேவாவின் மகன் ஸ்ரீகாந்தை அரவணைத்து முதலமைச்சர் விஜய் ஆறுதல் கூறினார்.

இதனிடையே, தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பாளர், கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களைக் கவர்ந்தவர் என எக்ஸ் பக்கத்தில் தேவாவுக்கு முதலமைச்சர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார். பல்வேறு விருதுகளை பெற்ற தேவாவின் இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் ராஜ்மோகன், வன்னி அரசு உள்ளிட்டோரும் தேவா உடலுக்கு மரியாதை செலுத்தினர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள தேவாவின் சொந்த ஊரான சக்கரமல்லூரில் அவரது உடல் இன்று பிற்பகல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.