திடீரென 'ஆரஞ்சு' நிறமாக மாறிய அலாஸ்கா நதிகள்: சுவாசிக்க முடியாமல் திணறும் மீன்கள்; என்ன காரணம்?
அலாஸ்கா மட்டுமின்றி கனடா, ரஷ்யா, ஆண்டிஸ் மலைத்தொடர் மற்றும் ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலைத்தொடர் என உலகெங்கிலும் பனி உறைந்த நிலப்பரப்புகள் உள்ள அனைத்து இடங்களிலும் நதிகள் இப்படி ஆரஞ்சு நிறமாக மாறத் தொடங்கியுள்ளன.
பேய் படத்தில் வருவதுபோல, அடர்ந்த பனி நிறைந்த காடுகளுக்கு நடுவே கண்ணாடி போல ஓடிக்கொண்டிருந்த ஆறுகள் அனைத்தும் திடீரென ரத்தம் கலந்ததுபோல தடிமனான ஆரஞ்சு நிறமாக மாறினால் எப்படியிருக்கும்? அத்தகைய விசித்திரமான ஆபத்தான சூழலியல் மாற்றம் தான் இப்போது அலாஸ்காவின் தொலைதூரப் பகுதிகளில் அரங்கேறி வருகிறது. விஞ்ஞான இதழான 'கம்யூனிகேஷன்ஸ் எர்த் & என்விரான்மென்ட்'-ல் வெளியாகியுள்ள புதிய ஆய்வு, இது ஏதோ தொழிற்சாலைகள் செய்த வேலை அல்ல, மாறாக 'காலநிலை மாற்றம்' (Climate Change) இயற்கையின் விதிகளையே மாற்றி எழுதி வருவதன் விளைவு என எச்சரிக்கிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, அலாஸ்காவின் நிலப்பரப்பில் 'பெர்மாஃப்ரோஸ்ட்' (Permafrost) எனப்படும் உறைபனி அடுக்கு ஒரு இயற்கை பூட்டு போலச் செயல்பட்டு வந்தது. நிலத்தடி மண்ணில் இருக்கும் ஆபத்தான தாதுக்களும் உலோகங்களும் வெளியே வராதபடி இது தடுத்து நிறுத்தியிருந்தது.ஆனா, பூமி வெப்பமடைவதால் இந்த பனி அடுக்குகள் தற்போது வேகமாக உருக தொடங்கியுள்ளன. விளைவு? பல யுகங்களாக உள்ளே சிறைப்பட்டிருந்த உலோகங்கள் அனைத்தும் வெளியேறி, அப்படியே நதிநீரில் கலக்கத் தொடங்கியுள்ளன.
நிலத்தின் உயரத்திற்கு ஏற்ப இந்த நதிகள் நிறமாறும் வித்தை இரண்டு வெவ்வேறு வழிகளில் நடப்பதாக அலாஸ்கா பசிபிக் பல்கலைக்கழக பேராசிரியர் ரோமன் டயல் விளக்குகிறார். உயரமான மலைப்பகுதிகளில் 'பைரைட்' எனப்படும் 'முட்டாள்களின் தங்கம்' என்ற தாது புதைந்து உள்ளது. பனி உருகி இந்தத் தாது தண்ணீரோடு கலக்கும்போது, அங்கு பயங்கர வேதிவினை நடந்து 'சல்பூரிக் அமிலம்' மற்றும் நச்சு இரும்புத் துகள்கள் உருவாகின்றன. இந்தத் துரு துகள்கள்தான் நதியை ஆரஞ்சு நிறமாக மாற்றுகின்றன.
தாழ்வான சமவெளிப் பகுதிகளில் பனி உருகி சதுப்பு நிலங்கள் உருவாகின்றன. அங்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுவதால், அங்கிருக்கும் நுண்ணுயிரிகள் ஆக்ஸிஜனுக்குப் பதிலாக இரும்பைச் சுவாசிக்கத் தொடங்குகின்றன. இந்த இரும்பு நதிநீரில் கலந்து, மேலே உள்ள ஆக்ஸிஜன் தொட்டவுடன் அப்படியே 'துருவாக' மாறி நதியையே நிறமாற்றம் செய்கிறது. இந்த ஆரஞ்சு நிற ஆறு பார்ப்பதற்கு விசித்திரமாக இருந்தாலும், அங்கு வாழும் நீர்வாழ் உயிரினங்களுக்கு இது நரகமாக மாறியுள்ளது. இந்தத் துரு கலந்த நீர் சுமார் 100 கிலோமீட்டருக்கும் மேல் பாய்ந்து ஒட்டுமொத்த ஆற்றுப்படுகையையும் மூடிவிடுகிறது.
இதனால், முட்டையிடுவதற்குத் தெளிவான கூழாங்கற்களைத் தேடும் 'சால்மன்' (Salmon) போன்ற மீன்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. இந்த இரும்புத் துகள்கள் மீன்களின் செவுள்களை அடைத்து, அவை சுவாசிக்க முடியாமல் திணற வைக்கின்றன. இதனால் உணவுச் சங்கிலி உடைந்து, ஒட்டுமொத்த நதி சூழியலும் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது அலாஸ்காவில் சிறிய எச்சரிக்கை மணியாகத்தான் தொடங்கியது. ஆனால் இப்போது இந்த ஆபத்து மணி உலகம் முழுவதும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது என்கிறார் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி டிம் லியான்ஸ். அலாஸ்கா மட்டுமின்றி கனடா, ரஷ்யா, ஆண்டிஸ் மலைத்தொடர் மற்றும் ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலைத்தொடர் என உலகெங்கிலும் பனி உறைந்த நிலப்பரப்புகள் உள்ள அனைத்து இடங்களிலும் நதிகள் இப்படி ஆரஞ்சு நிறமாக மாறத் தொடங்கியுள்ளன.
இதற்கு தீர்வே இல்லையா? விஞ்ஞானிகள் கைவிரிக்கும் கசப்பான உண்மை என்னவென்றால், இந்த நிறமாற்றம் ஒருமுறை தொடங்கிவிட்டால் அதனை மனிதர்களால் நிறுத்தவே முடியாது. ஆனால், நிலத்தடி வெப்பநிலையை ஆராய்வதன் மூலம் அடுத்து எந்த நதி ஆரஞ்சு நிறமாக மாறும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியும். இதன் மூலம் நதிக்குக் கீழே வாழும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும், இன்னும் பாதிக்கப்படாமல் இருக்கும் மற்ற நீர்நிலைகளைத் தீவிரமாகப் பாதுகாக்கவும் நம்மால் முடியும் என விஞ்ஞானிகள் இந்த ஆய்வின் மூலம் வழிகாட்டுகின்றனர்.