வரலாற்றை மாற்றிய ஏலம்: ரூ.482 கோடிக்கு விற்கப்பட்ட ராட்சத டி ரெக்ஸ் எலும்புக்கூடு!
அமெரிக்காவில் சுமார் 38 அடி உயரம் கொண்ட மிகப்பெரிய டைரானஸ்சோரஸ் ரெக்ஸ் (Tyrannosaurus Rex) வகை டைனோசரின் முழுமையான எலும்புக்கூடு இந்திய மதிப்பில் ரூ.482 கோடியே 11 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.இந்த ஏலம் உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஏலத்தில் புதிய சாதனை
நியூயார்க்கில் செயல்படும் பிரபலமான ஏல நிறுவனமான சோத்பீஸ் (Sotheby’s) இந்த சிறப்பு ஏலத்தை நடத்தியது. சுமார் 6 கோடியே 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த கிரெட்டேசியஸ் (Cretaceous) காலத்தைச் சேர்ந்த இந்த டி ரெக்ஸ் டைனோசரின் எலும்புக்கூடு ஏலத்தில் வைக்கப்பட்டது.
சுமார் 38 அடி நீளமும், மிகப்பெரிய அளவிலான உடல் அமைப்பும் கொண்ட இந்த டைனோசர் எலும்புக்கூடு, பழங்கால உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியாளர்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் தனியார் சேகரிப்பாளர்கள் மத்தியில் இது அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியது.
இதன் ஆரம்ப மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் ரூ.413 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஏலத்தின் போது பலரும் இந்த அரிய டைனோசர் எலும்புக்கூட்டை வாங்க போட்டியிட்டனர். இறுதியில், எதிர்பார்ப்புகளை மிஞ்சி ரூ.482 கோடியே 11 லட்சத்துக்கு இது விற்பனையாகி,ஏலத்தில் புதிய சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, சோத்பீஸ் நிறுவனம் கடந்த 2024ஆம் ஆண்டு ஸ்டிகோசரஸ் (Stegosaurus) வகை டைனோசரின் எலும்புக்கூட்டை ரூ.425 கோடிக்கு ஏலம் விட்டிருந்தது. அந்த சாதனையை தற்போது டி ரெக்ஸ் எலும்புக்கூடு முறியடித்துள்ளது.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பிரம்மாண்ட உயிரினத்தின் எச்சம், இன்றைய காலத்தில் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போனது, பழங்கால உயிரினங்கள் மீதான உலக மக்களின் ஆர்வத்தையும் அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.