7.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய அதியசம்: டைனோசர் காலத்தில் வாழ்ந்த பாம்பின் புதைபடிவம் கண்டுபிடிப்பு

7.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய அதியசம்: டைனோசர் காலத்தில் வாழ்ந்த பாம்பின் புதைபடிவம் கண்டுபிடிப்பு

பிரேசிலில் கண்டெடுக்கப்பட்ட 'டமேதாரா மிரிம்' என்ற 7.5 முதல் 8.5 கோடி ஆண்டுகள் பழமையான பாம்பின் புதைபடிவம், அறிவியல் உலகத்தையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

பூமியில் பிரமாண்ட டயனோசர்கள் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்த காலத்தில், அவற்றின் காலடிகளுக்கு இடையே சத்தமில்லாமல் ஊர்ந்து திரிந்த சிறிய பாம்பு, இன்று அறிவியல் உலகத்தை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. பாம்புகளின் பரிணாம வளர்ச்சி பற்றி பல தசாப்தங்களாக விஞ்ஞானிகள் வைத்திருந்த கணிப்புகளை உடைத்தெறிந்துள்ளது இந்த புதிய கண்டுபிடிப்பு.

தென்கிழக்கு பிரேசிலில் கண்டெடுக்கப்பட்ட இந்த அரிய புதைபடிவத்திற்கு ‘டமேதாரா மிரிம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சுமார் 7.5 முதல் 8.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த பாம்பு, 42 செ.மீ. நீளம் மட்டுமே கொண்டது. பிரமாண்ட நீண்டகழுத்து டயனோசர்கள், ராட்சத முதலைகள் மற்றும் ஆதி பறவைகளுக்கு மத்தியில், செழிப்பான நிலப்பரப்பில் இது வலம் வந்துள்ளது. இந்த பரபரப்பான ஆய்வு முடிவுகள் புகழ்பெற்ற ‘நேச்சர்’ (Nature) அறிவியல் இதழில் வெளியாகியுள்ளன.

டயனோசர் காலத்தில் வாழ்ந்த பாம்புகளின் எலும்புகள் மிகவும் மென்மையானவை என்பதால், அவை புதைபடிவங்களாகக் கிடைப்பது அபூர்வத்திலும் அபூர்வம். அப்படியே கிடைத்தாலும் அரைகுறையாகவே கிடைக்கும். ஆனால், டமேதாரா மிரிம் பாம்போ விஞ்ஞானிகளுக்கு கிடைத்த பெரும் புதையல். இதன் மண்டை ஓட்டின் 60% பகுதியும், முதுகெலும்புத் தொடரின் 70% பகுதியும் சிதையாமல் அப்படியே கிடைத்து உள்ளன. நவீன 'ஹை-ரெசல்யூஷன்  சி.டி ஸ்கேன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இந்த பாம்பின் மூளை அமைப்பை விஞ்ஞானிகள் முப்பரிமாணத்தில் (3D) துல்லியமாக மறுஉருவாக்கம் செய்து அசத்தியுள்ளனர்.

இந்த மூளை அமைப்பை ஆராய்ந்தபோது ஒரு உண்மை வெளிப்பட்டது. இன்றைய 'பவளப் பாம்புகளைப்' போலவே, இதுவும் தரைக்கடியில் பொந்துகள் தோண்டி வாழும் தகவமைப்பை பெற்றிருந்தது. பொதுவாக, உயிரினங்கள் ஒரே பாதையில் தான் பரிணாம வளர்ச்சி அடையும் என்று கருதப்பட்டது. ஆனால், இந்தப் பாம்பு வெளிப்படுத்திய உண்மை வேறு. ஆரம்பகால பாம்புகள் ஏதோ ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு மட்டும் மாறாமல், நிலத்தடி, தரைப்பகுதி, கடல் என பல்வேறு சூழல்களுக்கும் மாறி மாறி தங்களை தகவமைத்துக் கொண்டுள்ளன.

அதாவது, பாம்புகளின் பரிணாம வளர்ச்சி நாம் நினைத்ததை விட மிகவும் சுறுசுறுப்பானதாகவும், நெகிழ்வுத்தன்மை கொண்டதாகவும் இருந்திருக்கிறது. வெவ்வேறு பாம்பு குடும்பங்கள் பல மில்லியன் ஆண்டுகளில் தங்களுக்கு தேவையான சிறப்பு வாழ்விடங்களை சுதந்திரமாக தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளன. சுமார் 17 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பல்லி போன்ற மூதாதையர்களிடம் இருந்து தான் பாம்புகள் உருவானதாக நம்பப்படுகிறது.

ஆனால், கால்கள் மெல்ல மெல்ல மறைந்து, உடல் நீளமாக மாறிய அந்த இடைப்பட்ட வரலாறு விஞ்ஞானிகளுக்கு பெரும் புதிராகவே நீடித்தது. தற்போது கிடைத்த புதைபடிவத்தில் பற்களோ அல்லது இடுப்புப் பகுதியோ இல்லாவிட்டாலும், இதற்கு முன்பாக கண்டறியப்பட்ட 'நஜாஷ் ரியோனெக்ரினா' என்ற பண்டைய பாம்பை போலவே, இந்த டமேதாரா மிரிம் பாம்புக்கும் உறுதியான பின்னங்கால்கள் இருந்திருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஆரம்பகால மூதாதையர் பாம்புகள் முழுமையாக பூமிக்கடியிலோ அல்லது தரைமட்டத்திலோ வாழாமல், இரண்டிற்கும் இடைப்பட்ட வாழ்க்கை முறையை கொண்டிருந்திருக்கலாம்.

அங்கிருந்துதான் இன்று நாம் பார்க்கும் பல்வேறு வகையான பாம்புகளாக பிரிந்து பெருகியிருக்கின்றன. டயனோசர்களின் காலத்தில், பூமியின் மிகச்சிறந்த ஊர்வன இனமாக பாம்புகள் எவ்வாறு உருவெடுத்தன என்ற வரலாற்றுப் புதிரை அவிழ்க்க, இந்த 7.5 கோடி ஆண்டு புதைபடிவம் ஒரு புதிய கதவைத் திறந்து வைத்துள்ளது.