39 வார கர்ப்பத்திலும் யோகா செய்து அசத்தும் பெண்

39 வார கர்ப்பத்திலும் யோகா செய்து அசத்தும் பெண்

2 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்ற  இந்த வீடியோ, கர்ப்ப காலத்தில் வலிமை, பாதுகாப்பு மற்றும் உடற்பயிற்சி குறித்து  மாறுபட்ட கருத்துக்களை பெற்றுள்ளது.

சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை பலரும் யோகாவில் அசத்தும் வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்படும். இந்நிலையில்  பெங்களூரை சேர்ந்த ஷஷி பிரபா திவேதி என்ற யோகா  ஆசிரியை தான் 39 வார கர்ப்பிணியாக இருக்கும்போதும், யோகாவில் கஷ்டமான ஆசனங்களை செய்யும் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 

அதில் அவர் சக்ராசனம் (சக்கர நிலை) உட்பட பல யோகாசனங்களை செய்யும் காட்சிகள் உள்ளது. இதுகுறித்து அவரது பதிவில் 39 வாரங்கள், இதுதான் என் யதார்த்தம். சிலர் நான் செய்யும் ஆசனங்களை பார்க்கிறார்கள். ஆனால், என் உடலுக்கு வலிமை, விழிப்புணர்வு, பொறுமை மற்றும் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள நான் செலவழித்த ஆண்டுகளை அவர்கள் பார்ப்பதில்லை. கர்ப்பம் என்பது எதையும் நிரூபிப்பதற்காக அல்ல. எனக்கு இதமாக உணரும் விதத்தில், உடல் இயக்கத்துடன் இணைந்திருப்பதற்காகவே அது இருந்துள்ளது  என்று  கூறி உள்ளார்.  

2 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்ற  இந்த வீடியோ, கர்ப்ப காலத்தில் வலிமை, பாதுகாப்பு மற்றும் உடற்பயிற்சி குறித்து  மாறுபட்ட கருத்துக்களை பெற்றுள்ளது. பயனர்கள் பலரும், இந்த பயிற்சி வலிமையையும் ஒழுக்கத்தையும் வெளிப்படுத்துகிறதா? அல்லது தேவையற்ற அபாயங்களை ஏற்படுத்துகிறதா? என்று கேள்வி எழுப்பி இருந்தனர்.  

ஒரு பயனர், இது குழந்தைக்கு பாதுகாப்பானதா? பார்வைகளுக்காக இதை செய்யாதீர்கள். உங்கள் குழந்தையை பற்றி மட்டும் சிந்தியுங்கள் என்று பதிவிட்டிருந்தார். மற்றொருவர், உங்கள் திறமையை நான் மதிக்கிறேன், ஆனால் ஒரு அழகான கர்ப்பத்தை உலகிற்கு வெளிப்படுத்துவதை நான் விரும்பவில்லை. ஒரு கர்ப்பிணி பெண்ணாக, இது மிகவும் மரியாதையற்ற செயல் என்று நான் கருதுகிறேன் என பதிவிட்டிருந்தார். இதுபோன்று பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டதால் அவரது இந்த வீடியோ நெட்டிசன்களிடம் விவாதத்தை ஏற்படுத்தியது.