அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பால் இலங்கைக்கு ஏற்றுமதி வாய்ப்பு அதிகரிப்பு; பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்தல்
அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிக் கொள்கைகளால் இலங்கைக்கு சாதகமான வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிப் பட்டியலில் இலங்கைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளமை, நாட்டின் ஏற்றுமதித் துறைக்கு நன்மை பயக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகளை அதிகரிக்க இலங்கைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இலங்கையின் ஆடைத் தொழில்துறைக்கு இந்த மாற்றம் சாதகமான சூழலை உருவாக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்காவிற்கு போட்டியாக பொருட்களை ஏற்றுமதி செய்யும் சில நாடுகளுக்கு வரிகள் விதிக்கப்பட்டுள்ளதால், அந்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும். இதனால் இலங்கைப் பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 23 முதல் 24 சதவீதம் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுகின்ற நிலையில், இந்தப் பங்கை மேலும் அதிகரிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்காக இலங்கையின் ஆடைத் தொழில்துறையை விரிவுபடுத்துவதுடன், கிடைக்கும் ஏற்றுமதி ஆணைகளை தடையின்றி நிறைவேற்றுவதற்கான உற்பத்தி மற்றும் விநியோகத் திறன்களை மேம்படுத்த வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.