துறைமுகத்தில் தேங்கியுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட உப்பு கொள்கலன்கள்

துறைமுகத்தில் தேங்கியுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட உப்பு கொள்கலன்கள்

கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக 1,000க்கும் மேற்பட்ட உப்பு கொள்கலன்கள் துறைமுகக் களஞ்சியசாலைகளில் தேங்கிக் கிடப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உப்பு இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த பின்னரும் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட உப்பு கொள்கலன்களே இவ்வாறு தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், தரமற்றவை எனக் கண்டறியப்பட்ட மற்றும் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் அனுமதி தாமதமான மேலும் சுமார் 700 உப்பு கொள்கலன்கள் சுங்கப்பிரிவின் சில இடங்களில் தேங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நாட்டில் நிலவிய உப்புத் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக, உப்பு இறக்குமதி செய்ய தனியார் இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.

இது தொடர்பாக அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலில், கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் உப்பு இறக்குமதி செய்யப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

துறைமுகத்தில் தேங்கியுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட உப்பு கொள்கலன்கள் | Salt Containers Have Been Stuck At The Port

இருப்பினும், குறித்த காலக்கெடு முடிவடைந்த பின்னர் இறக்குமதியாளர்களால் உப்பு கொண்டு வரப்பட்டுள்ளது. அவ்வாறு கொண்டு வரப்பட்ட உப்புக் கொள்கலன்களே தற்போது துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சுங்க ஊடகப் பேச்சாளர் மற்றும் சுங்கப் பணிப்பாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவிக்கையில், உப்பு இறக்குமதி தொடர்பாக அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் படியே தாம் செயற்படுவதாகக் குறிப்பிட்டார்.

தேங்கியுள்ள கொள்கலன்களை மீண்டும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யுமாறு இறக்குமதியாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் இதுவரை அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அவர் கூறியமை குறிப்பிடத்தக்கது.