காதலியை நம்பிச் சென்ற காதலனுக்கு நேர்ந்த கொடூரம் ; சினிமா பாணியில் சித்திரவதை
காதல் விவகாரம் காரணமாக 18 வயது இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு, மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் போப்பாலைச் சேர்ந்த சோனு எனும் 18 வயது இளைஞர், ராஜஸ்தான் மாநிலம் ஜாலவர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்தப் பெண் சோனுவுடன் தங்கியிருந்த நிலையில், குடும்பத்தினர் தலையிட்டு அவரை மீண்டும் ராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், தனது காதலி அழைக்கிறார் என்று நம்பி அவரைச் சந்திக்க ராஜஸ்தான் சென்றுள்ளார் சோனு. ஆனால், அது அவரைப் பிடிப்பதற்காகப் போடப்பட்ட நாடகம் என்பது அவருக்குத் தெரியவில்லை.
அங்கு சென்ற சோனுவை அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் திட்டமிட்டு கடத்தி, மூன்று நாட்களாக ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளனர்.
சிறைபிடிக்கப்பட்ட சோனுவை அந்த குழு சரமாரியாகத் தாக்கியதோடு மட்டுமல்லாமல், மிகக் கொடூரமாக சிறுநீரை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்துள்ளனர். இந்த ஒட்டுமொத்தக் கொடூரத்தையும் அவர்கள் காணொளியாகப் பதிவு செய்து சோனுவின் குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்து மிரட்டியுள்ளனர்.
அந்த அதிர்ச்சிகரமான காணொளியைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்தனர்.
இந்த விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், கடத்தப்பட்ட இளைஞரை மீட்கும் பணிகளில் ஈடுபட்டதுடன், தலைமறைவாக உள்ள சந்தேக நபர்களைக் கைது செய்ய தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மனிதாபிமானமற்ற இந்தச் செயல் சமூக வலைத்தளங்களில் வெளியாகிக் கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.