கொழும்பு பங்குச் சந்தையின் பெயரில் பல மில்லியன் ரூபாய்கள் மோசடி! விசாரணைகள் தீவிரம்
கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) பெயர் மற்றும் முத்திரையை தவறாக பயன்படுத்தி 17 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான தொகையை முதலீட்டாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மோசடியை மேற்கொண்ட ஒரு போலி நிறுவனம் தொடர்பாக, கொழும்பு பங்குச் சந்தை, குற்றப் புலனாய்வு துறைக்கு முறைப்பாட்டை அளித்துள்ளது.
இந்த மோசடியாளர்கள், பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்ட சட்டப்பூர்வ நிதி நிறுவனம் போல நடித்து, பங்குச் சந்தை முதலீடுகள் மற்றும் நிதி ஆலோசனை சேவைகள் வழங்குவதாக கூறியுள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து செயல்பட்டதாக நம்பப்படும் இந்த மோசடி, ஒரு போலி கையடக்க செயலியின் மூலம் நடத்தப்பட்டுள்ளது.
இதுவரை சந்தேகநபர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை.
எனினும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவே, முதலீடு செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட நிறுவனம், கொழும்பு பங்குச் சந்தை மற்றும் பத்திரப் பரிவர்த்தனை ஆணையகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்குமாறு முதலீட்டாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.