அரச சேவையில் இணைய காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல் - அரசின் அதிரடி அறிவிப்பு
அரச சேவையில் புதிதாக 72,000 பேரை இணைத்துக் கொள்ளவுள்ளதாக தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் இராஜாங்க அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டில் பொதுமக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான மற்றும் நெருக்கமான சேவைகளை வழங்கும் அரசு நிறுவனங்கள் உட்பட, முழு அரச சேவையிலும் உள்ள வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்படவுள்ளன.
குறித்த வேலை வெற்றிடங்களை நிரப்புவதற்கு தேவையான ஒப்புதலையும் தேவையான நிதியைான 20 பில்லியன் ரூபாயையும் அரசாங்கம் ஏற்கனவே ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
பொருளாதார மேம்பாடு மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கிய அறிவுறுத்தல்களுக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அரச சேவையில் உள்ள அந்தந்த வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் கூட போட்டித் தேர்வை எதிர்கொண்ட பின்னரே ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெளிப்படைத்தன்மை மற்றும் திறமைகள் நிறைந்த ஒரு குழுவை அரச சேவையில் கொண்டு வருவது பொது மக்களுக்கு சேவைகளை வழங்குவதில் பெரும் உறுதுணையாக இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் 25,000 அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுகிறார்கள். ஓய்வு பெறுபவர்களுக்கு பதிலாக புதியவர்களை நியமிக்க வேண்டும். அதற்கமைய, பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையிலான குழு மூலம் வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் கூறினார்.

அமைச்சுகள், கூட்டுத்தாபனங்கள், சட்டரீதியான வாரியங்கள் மற்றும் பிற பொது நிறுவனங்களில் பணியாளர் வெற்றிடங்களை விரைவாக நிரப்புவதன் காரணமாக இந்த ஆண்டு பல புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
பொது மக்களுக்கு நேர்மையான அரச சேவையை வழங்கும் நோக்கில், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கும், அரச சேவையில் புதிய ஆட்சேர்ப்பு செய்வதற்கும் நாட்டின் வரலாற்றில் அதிக அளவு பணம் ஒதுக்கப்பட்ட ஆண்டாக 2026ஆம் ஆண்டு பதிவு செய்யப்படும்” என அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.