சிவனொளிபாதமலை செல்வோருக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்
டித்வா' புயலினால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக சேதமடைந்த மஹகிரிதம்ப பகுதி, இலங்கை இராணுவத்தினால் முழுமையாகப் புனரமைக்கப்பட்டுள்ளது.
புயலினால் பாதிக்கப்பட்ட ஹட்டன் - சிவனொளிபாதமலை பாதையை இலங்கை இராணுவத்தினர் முழுமையாகத் திருத்தியமைத்து, சிவனொளிபாதமலை யாத்திரிகர்களுக்காக மீண்டும் திறந்து வைத்துள்ளனர்.

ஸ்ரீபாதஸ்தானாதிபதி பெங்கமுவே ஸ்ரீ தம்மதின்ன நாயக்க தேரர், இராணுவத் தளபதியிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, யாத்திரிகர்கள் பாதுகாப்பாகப் பயணிக்கக்கூடிய வகையில் இராணுவப் படையினர் இப்பாதையை வழமைக்குக் கொண்டு வந்துள்ளனர்.
அத்துடன், அப்பாதையில் யாத்திரிகர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு நவீன பாதுகாப்பு வேலி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளமையால், ஹட்டன் வீதி ஊடாக வரும் பக்தர்கள் எவ்விதத் தடங்கலுமின்றி சிவனொளிபாதமலை யாத்திரையை மேற்கொள்ள முடியும் என சிவனொளிபாதமலைக்கு பொறுப்பான தொரபனே சுமனஜோதி தேரர் தெரிவித்துள்ளார்.