இந்த வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரம்பம்
2026 ஆம் ஆண்டிற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று (06) நடைபெறவுள்ளது.
சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம்(6) கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மற்றும் கடற்றொழில்ர ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நன்மைகள் சட்டத்தின் கீழான கட்டளைகள் என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இதற்கு மேலதிகமாக, பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்ட பிரகடனம் தொடர்பான பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மாகாண சபைத் தேர்தலை எந்த தேர்தல் முறையின் கீழ் நடத்துவது என்பது குறித்து ஆராய்ந்து, முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவை ஸ்தாபிப்பது தொடர்பான பிரேரணையும் இன்றைய தினம் அங்கீகாரத்திற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், இதன்போது பல சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளன.