புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் தடையின்றி தொடரும் - எரிசக்தி அமைச்சர்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் தடையின்றி தொடரும் - எரிசக்தி அமைச்சர்

அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். 

இருப்பினும், அந்தத் திட்டங்களால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் மனிதாபிமான ரீதியாக பரிசீலிக்கப்பட்டு அவற்றைத் தீர்க்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

காலியின் ஹியார பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 5 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தைத் இன்று (4) திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் இவ்வாறு கூறினார். 

நிகழ்வில் மேலும் அமைச்சர் தெரிவித்துள்ளதாவது, 

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி ஒரு தேசியத் தேவை என்றும், தேசியத் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்றும், அனைவரும் அதன் பெறுமதியை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். 

"இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டமும் இதேபோன்றதுதான். நாங்கள் அந்தத் திட்டத்தை நல்லெண்ணத்துடனும் வெளிப்படையாகவும் தொடங்கினோம், அதே நேரத்தில் ஊழியர் உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாத்தோம், மேலும் இயன்றளவில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினோம். நாட்டின் எரிசக்தித் துறையின் இலக்குகளை அடைய வேண்டுமானால், அந்த மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்துவது அவசியம். எனவே, அந்தத் திட்டத்தை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்துவோம்." எனவும் அமைச்சர் தெரிவித்தார்.