
சந்தேகநபர் ஒருவர் சுட்டுப் படுகொலை
அம்பாந்தோட்டை, சூரியவெவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேற்படி நபர் கொஸ்கொட பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 31 ஆம் திகதி கொஸ்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துவமொதர கடலாமைகள் பாதுகாப்பு மத்திய நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அறை ஒன்றில் உறங்கிக் கொண்டிருந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
அந்த மத்திய நிலையத்தின் உரிமையாளரின் மகனே இவ்வாறு கொலை செய்யப்பட்டதுடன் அவர் சுற்றுலா வழிகாட்டி ஒருவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பிரதான துப்பாக்கிதாரி சூரியவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேவகம பகுதியில் மறைந்து இருக்கின்றார் என்று கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய காலி பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரப் படையினர் சந்தேகநபரைக் கைது செய்வதற்காக நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் சம்பவ இடத்துச் சென்று விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது சந்தேகநபர் பொலிஸார் மீது கைக்குண்டு ஒன்றை வீசியுள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதையடுத்துப் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தின்போது அவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தின் போது பொலிஸ் விசேட அதிரடிப் படை உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மக்கொன பிரதேசத்தைச் சேர்ந்த பெருவளை கோசல என அழைக்கப்படும் தொன்கோசல என்பவரே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சூரியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.