
தபால் ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் இல்லை : வெளியான அதிர்ச்சித் தகவல்
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு இம்மாத (ஓகஸ்ட்) சம்பளம் வழங்கப்படாது என தபால் மா அதிபர் ருவான் சத்குமார (Ruwan Sathkumara) அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தி, மாதாந்த சம்பளம் பெற வேண்டுமானால் உடனடியாக கடமைக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கும் எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
வேலைநிறுத்தம் காரணமாக இதுவரை சுமார் 140 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த தபால் மா அதிபர், எனினும், மத்திய தபால் நிலையத்தில் குவிந்து கிடந்த தபால் பைகள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
சம்பளம் வழங்குவதற்கு திறைசேரியிலிருந்து நிதி பெறப்பட வேண்டும் எனவும் வேலைநிறுத்தத்தின்போது சம்பளக் கொடுப்பனவுகளுக்கு நிதி விடுவிக்கப்படாது என தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எனவே, கடமைக்குத் திரும்பியவர்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்று கடமைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.