
கொலையில் மலரும் காதலும் இலங்கை யுவதிகளின் மோசமான மனநிலையும்
அண்மையில் புதுக்கடை நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நாட்டில் பாதுகாப்பு மற்றும் அரசியல் ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதனை தொடர்ந்து அடுத்தடுத்து இடம்பெற்று வரும் துப்பாக்கிச்சூடுகளும் கொலைகளும், அனைவரையும் அச்சமடைய செய்துள்ளதுடன் மிகக் கவனமாக செயற்பட வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், தற்போது, புதுக்கடை நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக கூறப்படும் பிரதான சந்தேகநபரை உள்ளடக்கி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் செய்திகளும் படங்கள் மற்றும் காணொளிகளும் முகம் சுளிக்கும் வகையில் உள்ளன எனலாம்.
இவ்வாறான செயற்பாடுகள், நாட்டின் இளம் தலைமுறையினரின் சிந்தனை எந்த வகையில் உள்ளது மற்றும் போதியளவு அறிவூட்டல்களை அவர்கள் பெறாமல் உள்ளமையை எடுத்து காட்டும் வகையில் அமைந்திருக்கின்றன.
அண்மைய நாட்களாக, இளையவர்கள், அதிகம் பயன்படுத்தும் சமூக ஊடகங்களான முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம் செயலி மற்றும் டிக்டொக் ஆகியவற்றில் புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிதாரி குறித்த பதிவுகள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.
அவற்றில், இளம் தலைமுறையை சேர்ந்த பதின்ம வயது பெண்கள், குறித்த துப்பாக்கிதாரியின் அழகை வர்ணிக்கும் வகையில் கருத்துக்களை பகிர்வதுடன் அவரை தங்களது Crush (க்ரஷ்) எனவும் (ஆங்கிலத்தில் Crush என்பது ஒரு தற்காலிக காதல் உணர்வை குறிக்கும்) குறிப்பிட்டு வருகின்றனர்.
அத்துடன், கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை தமது புகைப்படங்களுடன் இணைத்து சமூக வலைத்தளங்களில் பல பதின்ம வயது யுவதிகள் வெளியிட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது இளைய தலைமுறையின் எதிர்காலம் குறித்து பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. இந்நிலையில் பெண் பிள்ளைகளின் பெற்றோர், தமது பிள்ளைகள் சமூக வலைத்தளங்களில் எவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்பது குறித்து கண்காணிப்பது காலத்தின் கட்டாயமாகும்.
மேலும், இவ்வாறான செயற்பாடுகள், நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் தீவிரத் தன்மையினை அவர்கள் அறியவில்லை என்பதை எடுத்துக் காட்டும் வகையிலேயே பார்க்கப்படுகின்றது.
இது குறித்து, அவர்கள் சரியான வழிகாட்டல்களை பெறுவதுடன், இவ்வாறு சமூக பொறுப்பற்ற வகையில் நடந்து கொள்வது ஏற்புடையது அல்ல என்பது குறித்தும் விழிப்புடன் இருப்பது அவசியம்.
அது மாத்திரமன்றி, தற்போதைய நவீன தொழிநுட்பமான AI இனை பயன்படுத்தி புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்ட போது பொலிஸ் அதிகாரிகளுடன் சிநேகமாக பேசுவது போல ஒரு காணாளி உருவாக்கப்பட்டு பகிரப்பட்டு வந்தது.
இது தொடர்பில் நாடாளுமன்றத்திலும் கூட கேள்வி எழுப்பப்பட்டதுடன் கடுமையான கண்டனங்களையும் எழுப்பியிருந்தது. இதனை தொடர்ந்து, அது போலியான காணொளி என பொலிஸ் திணைக்களத்தினால் தெளிவுபடுத்தப்பட்டது.
அதேவேளை, இவ்வாறு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை பகிர்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் முகம் சுளிக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடும் தமது பிள்ளைகள் குறித்து பெற்றோர்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
மேலும், இதன் பின்விளைவுகள், தீவிரத்தன்மை என்பனவற்றை உணர்ந்து சமூக பொறுப்புடன் செயற்படுவதோடு குற்றங்களை புரிபவர்களுக்கு வரவேற்பளிக்கும் வகையில் செயற்படுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டியது நாட்டின் சமூக, கல்வி, பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிகளில் பெரும் பங்காற்றும் என்பதில் ஐயமில்லை.