
காட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவன்
அம்பாந்தோட்டை, பூந்தல தேசிய வனப்பகுதிக்குள் உள்ளடங்கிய ஊரனிய பிரதேசத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் சிறுவனொருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (21) இரவு 10:30 மணியளவில் கடற்கரைக்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்த போது, 12 வயது சிறுவன், பூந்தல தேசிய வனத்தின் வனசீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வனசீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சிறுவனை அம்பாந்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில், குறித்த சிறுவன் தற்போது அம்பாந்தோட்டை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இந்தச் சிறுவன் வனப்பகுதிக்குள் எவ்வாறு சென்றார் என்பது குறித்த தகவலும் இதுவரை தெரியவரவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுவனிடம் விசாரித்த போது பெலியத்த பகுதியில் வசிப்பதாகக் கூறியுள்ளார்.
எனினும் அவர் கண்டுபிடிக்கப்பட்ட வனப் பிரதேசம், பெலியத்த பகுதியிலிருந்து 70 கிலோமீட்டருக்கும் அதிகளவான தொலைவில் இருப்பதாக வனசீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.