ஹோட்டல் அறையில் வழிந்தோடிய நீர்; சடலமாக கிடந்த நபர்
மாவனெல்ல, பெலிகம்மன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் குளியலறையிலிருந்து நேற்று (2) காலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கும்புல்ஒலுவ, புடலுஓயா பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் குறித்த ஹோட்டலில் தற்காலிகமாக தங்கியிருந்துள்ள நிலையில், நேற்றைய தினம் அதிகாலை இவரது அறையில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை பார்த்த ஹோட்டல் முகாமையாளர், அறைக்குள் சென்று பார்த்த போது சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.
அறையில் இருந்து மதுபான போத்தல், இரண்டு இலட்சம் ரூபா பணம், ஒரு ஜோடி காதணிகள் மற்றும் சில மருந்துகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தொடர்பில் மாவெனெல்ல பதில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு, மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.