கடவுச்சீட்டு அலுவலகத்தை 24 மணிநேரமும் திறந்து வைக்க நடவடிக்கை! அநுர வாக்குறுதி
தற்போதைக்கு கடவுச்சீட்டு பெறுவதில் நிலவும் நெருக்கடிகளைக் குறைக்கும் வகையில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகத்தை 24 மணிநேரமும் திறந்து வைக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை(01) குருணாகல்- கல்கமுவ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதும் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, இந்த நாட்டில் இன்று ஊழல், மோசடியற்ற ஆட்சியொன்று உருவாக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் நாட்டுக்கு வரும் நிலையேற்பட்டுள்ளது.
நம் நாட்டின் வரலாற்றில் உலக வங்கி வழங்கிய அதிகூடிய தொகையொன்றை அடுத்த வருடமளவில் இந்நாட்டு விவசாயத்துறை அபிவிருத்திக்காக வழங்க உள்ளது.
இவ்வாறாக நாங்கள் ஒவ்வொரு விடயங்களிலும் மாற்றங்களை படிப்படியாக ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.
அதே போன்று கடவுச்சீட்டு நெருக்கடியை தீர்ப்பதற்கும் நாங்கள் விரைவில் நடவடிக்கை மேற்கொள்வோம். தற்போதைய கடவுச்சீட்டு நெருக்கடியானது முன்னைய அரசாங்கத்தினால் உருவான ஒன்றாகும்.
எனினும் அதனைத் தீர்க்கும் வகையில் விரைவில் 24 மணிநேரமும் கடவுச்சீட்டு அலுவலகத்தை செயற்பட வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.
அதற்காக ஓய்வு பெற்றுள்ள ஊழியர்களை மீண்டும் தற்காலிக அடிப்படையில் சேவையில் இணைத்துக் கொள்ள தீர்மானித்துள்ளோம். அதன் ஊடாக விரைவில் கடவுச்சீட்டு பெறுவதில் உள்ள நெருக்கடிகளை தீர்த்து வைப்போம்.
அதே போன்று இந்த வருடத்துக்குள் அரச சேவைக்கு சுமார் 30 ஆயிரம் பேரை இணைத்துக் கொள்ள எதிர்பார்க்கின்றோம் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.