இந்தியாவின் முதல் சைகை மொழி ஒளிவழி

இந்தியாவின் முதல் சைகை மொழி ஒளிவழி

இந்தியாவில், அனைவரையும் உள்ளடக்கும் கல்வி முறையை ஊக்குவிக்கும் நோக்கில் முதன்முறையாக சைகை மொழிக்கென ஓர் ஒளிவழி தொடங்கப்பட்டுள்ளது.

இம்முறை 24 மணிநேரம் செயல்படவிருக்கும். அந்த ஒளிவழியை இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதன் நேற்று (06) தொடங்கி வைத்தார்.

இந்திய நாட்டின் பிஎம் இ-வித்யா (PM e-VIDYA) திட்டத்தின்கீழ் புதிய ஒளிவழி தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், சேனல் 31 (Channel 31) என்றழைக்கப்படும் அந்தப் புதிய ஒளிவழியை இந்தியாவின் தேசிய கல்வி ஆய்வு, பயிற்சி மன்றம் (NCERT) நடத்தும். 

இந்தியா முழுவதும் உள்ள செவித்திறன் குறைபாடு உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் ஆகியோருக்கு முழுமையான கல்வி வளங்களை வழங்குவது சேனல் 31ன் இலக்காகும்.

சேனல் 31 தொடக்க நிகழ்ச்சியில் பேசிய பிரதன், இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP) திட்டம் சிறப்புத் தேவைகள் உள்ள சிறுவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதாகக் குறிப்பிட்டார். 

அந்த வகையில், அனைவரையும் உள்ளடக்கும் கல்வி முறையை நோக்கிய பயணத்தில் முக்கிய அடி எடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடர்புகொள்ள ஒலி மட்டும் முக்கியமானது இல்லை என்பதைச் சுட்டிய அவர், சைகை மொழி போன்ற மாற்றுத் தொடர்பு முறைகளும் சமமான வாய்ப்புகள் வழங்கப்படுவதில் முக்கியப் பங்கு வகிப்பதாக எடுத்துச்சொன்னார்.

இந்திய சைகை மொழி (ISL) பரவலாகப் பயன்படுத்த வகைசெய்யும் நோக்கில் அதனை உலகத் தரத்துக்கு மேம்படுத்துமாறு பிரதன் கேட்டுக்கொண்டார். 

செவித்திறன் குறைபாடு இருப்போருக்கு ஆதரவளிக்கும் நோக்கில் கூடுதலானோரை இந்திய சைகை மொழியைக் கற்றுக்கொள்ளுமாறும் அவர் வேண்டினார்.

சைகை மொழிக் கற்றலை ஊக்குவிப்பதன் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சேனல் 31, தொடர்புகொள்வதை மேம்படுத்தி மாற்றுத் திறனாளிகளின் ஆற்றலை வெளிக்கொண்டுவரும் பாலமாக அமைகிறது என்று பிரதன் விவரித்தார். 

சேனல் 31ஐப் பிரபலப்படுத்தி அது நாடு முழுவதும் சென்றடைவதை உறுதிப்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், இந்திய சைகை மொழிக்குப் பெரிய அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அனைவரையும் உள்ளடக்கும் வருங்காலத்தை நோக்கி இந்தியாவைப் பயணம் செய்யவைக்கவும் ஆற்றல் உள்ளதென்று பிரதன் எடுத்துச்சொன்னார்.