கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்! ஸ்ரீலங்கா அரசுக்கு சம்பந்தன் அறிவுறுத்தல்

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்! ஸ்ரீலங்கா அரசுக்கு சம்பந்தன் அறிவுறுத்தல்

இலங்கையின் ஆட்சியாளர்கள், இந்தியாவுக்கும், சர்வதேசத்திற்கும், ஐக்கிய நாடுகள் சபைக்குப் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்கள், அவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியொன்றிலேயே இதனை தெரிவித்தார். தொடர்ந்து அவர்,

தமிழரசுக் கட்சி தேர்தலுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சியல்ல. இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டதுமல்ல. தந்தை செல்வாவினால் 1949ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கட்சியாகும். எமது கொள்கைகளை 1956ஆம் ஆண்டு முதல் மக்கள் முன்னிலையில் வைத்து அதற்கான அங்கீகாரத்தினை பெற்று வந்திருக்கிறோம்.

ஜனநாயகம் மக்களுக்கு உரித்தானது. ஜனநாயகம் தனிநபருக்கு உரித்தானது அல்ல. என்னை மக்களே தெரிவுச் செய்தார்கள். 2015ஆம் ஆண்டுக்கு முன்னதாக ஆட்சியாளர்கள் ஜனநாயகத்திற்கு எதிராக அதீதமாக செயற்பட்டதனாலேயே ஆட்சிமாற்றம் நிகழ்ந்தது.

ஆட்சியமைப்பவர்கள் அரசியல் சாசன திருத்தங்களை மேற்கொள்வதற்கு அல்லது புதிய அரசியல் சானத்தினை உருவாக்க முனைகின்றபோது மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியமாகிறது. இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்குப் பின்னர் அரசியல் தீர்வு விடயத்தில் பல்வேறு விடயங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

இலங்கையின் ஆட்சியாளர்கள், இந்தியாவுக்கு, சர்வதேசத்திற்கு, ஐக்கிய நாடுகளுக்குப் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்கள், அவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றார்.