
வவுனியாவில் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டல்
வவுனியாவில் பகல்நேரப் பராமரிப்புடன் கூடிய முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.
வவுனியா வெளிவட்ட வீதியில் அமைந்துள்ள குடிவரவு திணைக்களத்திற்கு அருகாமையில் இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்டிருந்த வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன்பந்துலசேன மதவழிபாடுகளின் பின்னர் அடிக்கல்லை நாட்டி நிகழ்வை ஆரம்பித்து வைத்திருந்தார்.
குறித்த செயற்றிட்டமானது மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் 8 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டிலும் வவுனியா மாவட்டசெயலகத்தின் பங்களிப்புடனும் அமைக்கப்படவுள்ளது.
5 வயதிற்குட்பட்ட பிள்ளைகள் இங்கு அனுமதிக்கப்படவுள்ளதுடன், மாவட்ட செயலகத்தின்கீழ் தெரிவுசெய்யப்படும் நிர்வாகத்தினரால் அதன் பணிகள் முன்னெடுக்கப்படும்.
இந்த நிகழ்வில், மாவட்ட செயலகத்தின் கணக்காளர் பால்ராஜ், திட்டமிடல் பணிப்பாளர் வில்வராயா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் சபாலிங்கம், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கிருபாசுதன், பிரதேச செயலாளர் ந.கமலதாசன், சிறுவர் நன்னடத்தைப்பிரிவு உத்தியோகத்தர் ஜெயக்கெனடி, அபிவிருத்தி உத்தியோயகத்தர் ச.சுபாசினி, மதகுருமார்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.