
பழைய விளையாட்டு வேறு விதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது - சம்பிக்க ரணவக்க
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் உயர் அதிகாரி ரஜீவ ஜயவீர சம்பந்தமான நீதிமன்ற அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் தற்போதைய அரசாங்கம் பழைய விளையாட்டை வேறு விதமாக ஆரம்பித்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பில் நேற்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்க போவதாக அரசாங்கமும் பிரதமரும் அடிக்கடி கூறி வருகின்றனர். 19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற அவர்கள் வாக்களித்தார்கள். மகிந்த ராஜபக்சவுடன் இருக்கும் அணியினரே அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் நிறைவேற்ற வாக்குகளை வழங்கினர்.
இந்த திருத்தச் சட்டத்தை நிறைவேற்றும் பிதாக்கள் ராஜபக்ச முகாமிலேயே இருந்தனர். தற்போது அவர்களே அதனை விமர்சிக்கின்றனர்.
தற்போது இவர்களின் தேவை என்ன? சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவை ஒழிக்க வேண்டும். சுயாதீன் நீதித்துறை இல்லாமல் ஒழித்து விட்டு தமக்கு நெருக்கமானவர்களை நீதிமன்றங்களில் நிரப்ப வேண்டும்.
பொலிஸ் ஆணைக்குழு தற்போது நடைமுறையில் செயலிழந்து காணப்படுகிறது. எதிர்காலத்தில் பொலிஸ் ஆணைக்குழுவை முற்றாக அரசியல்மயப்படுத்தி அரசியல் நியமனங்களை வழங்க வேண்டும்.
நல்லாட்சி அரசாங்கம் ஓரளவுக்கு ஜனநாயகத்தை இந்த நாட்டுக்கு பெற்றுக்கொடுத்தது. நாங்கள் ஊடகவியலாளர்களை எப்போதும் கடத்திச் செல்லவில்லை. எந்த கொலைகளும் நடக்கவில்லை.
சுதந்திர சதுக்கத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட நபரின் நீதிமன்ற அறிக்கை இது வெளியாகவில்லை. அவர் தற்கொலை செய்துக்கொண்டாரா அல்லது கொலை என்பதை இன்னும் கூறவில்லை எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.