
நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி அனுருத்த சம்பாயோ CIDயிடம் ஒப்படைப்பு
கைது செய்யப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி அனுருத்த சம்பாயோ மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்
காவல்துறை ஊடகப் பேச்சாளாரும் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி அந்த திணைக்களம் வாக்குமூலம் பெற்றதின் பின்னர் அவர் இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவானிடம் முன்னிலைப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 11 நாட்களின் பின்னர் நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி அனுருத்த சம்பாயோ, நீர்கொழும்பு காவல்துறை விசாரணை குழுவில் நேற்று சரணடைந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்
நீர்கொழும்பு சிறைச்சாலையின் கைதிகளுக்கு சலுகைகளை ஏற்படுத்தி கொடுத்தமை தொடர்பில் அவர் உள்ளிட்ட 4 அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதற்கமைய அவர்களை கைது செய்யுமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றால் கடந்த 22 ஆம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இதற்கமைய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 3 அதிகாரிகள் இதற்கு முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்துள்ள நிலையில் தற்போது அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.