வடக்கு மாகாணத்திலேயேஅதிகளவான தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் பதிவு- வீவ்

வடக்கு மாகாணத்திலேயேஅதிகளவான தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் பதிவு- வீவ்

டக்கு மாகாணத்திலேயே அதிகளவான தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்புக்கான தன்னார்வ முயற்சி (வீவ்) தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தேர்தல் கண்காணிப்புக்கான தன்னார்வ முயற்சியின் ஒன்றிணைந்த செயற்குழு உறுப்பினர் ஆதில் அலி சப்ரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சட்ட விரோத பரப்புரை நடவடிக்கைகள், வாக்காளர்களுக்கு பணம் வழங்குதல், வாக்காளர்களை மத ரீதியான சுற்றுலாக்கள் அழைத்துச் செல்லல், கட்சியின் பெயர்,இலக்கம் பொறிக்கப்பட்ட பத்திரங்களை விநியோகித்தல், தனிமைப்படுத்தல் சட்ட ஒழுங்குகளை மீறல், சட்டவிரோத வாகன பேரணிகள் போன்ற தேர்தல் சட்ட மீறல்கள் சம்பவங்கள் வடக்கு மாகாணத்திலேயே அதிகளவு பதிவாகியுள்ளது.

மேலும் தேர்தல் தினத்திலும் பரப்புரை நடவடிக்கைகளை மேற்கொள்ள சில கட்சிகளின் வேட்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனவே பொலிஸார், இவ்விடயங்களில்  பக்கச்சார்பின்றி செயற்பட வேண்டும்.

இதேவேளை தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக பொலிஸார் நடவடிக்கை எடுக்காத சில சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது. அவை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளோம்.

அத்துடன் தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து பிரஜைகள் முறைப்பாடுகளை மேற்கொள்வது நல்ல முன்னேற்றமாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.