நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி அனுருத்த சம்பாயோ கைது...!

நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி அனுருத்த சம்பாயோ கைது...!

நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி  அனுருத்த சம்பாயோ குருணாகல் பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகளின் பயன்பாட்டிற்காக  போதைப்பொருள் மற்றும் பல்வேறு உபகரணங்களை வழங்கியமை  குற்றச்சாட்டில் அனுருத்த சம்பாயோ பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில்  குற்றப்புலனாய்வு  திணைக்களம் அண்மையில் விசாரணைகளை முன்னெடுத்தது.

இதற்கமைய, கடந்த 22 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விடயங்களை சமர்ப்பித்தனர்.

அவற்றை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட நீதவான் நீதிமன்றம் நீர்கொழும்பு சிறைச்சாலையின் அதிகாரிகள் நால்வரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பித்தது.

நீர்கொழும்பு சிறைச்சாலையின் அத்தியட்சகராக பொறுப்பு வகித்த அநுருத்த சம்பாயோ, தலைமை சிறைச்சாலை அதிகாரி உபாலி சரத்சந்திர, பதில் சிறைச்சாலை அதிகாரி நிஷாந்த சேனாரத்ன, இரண்டாம் நிலை சிறைச்சாலை அதிகாரி பிரசாத் களுஅக்கல ஆகியோரைக் கைது செய்யுமாறு  பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அனுருத்த சம்பாயோ   இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.