தபால் மூல வாக்களிப்பு இன்று முதல் ஆரம்பம்

தபால் மூல வாக்களிப்பு இன்று முதல் ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று (4) ஆரம்பமாகின்றது.

இதன்படி, இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாவட்டச் செயலகங்கள், தேர்தல் செயலகங்கள், சிரேஷ்ட உதவி மற்றும் உதவி காவல்துறை அலுவலகங்கள், காவல்துறை அத்தியட்சகர் காரியாலயம், உதவி காவல்துறை அத்தியட்சகர் காரியாலயம்,

காவல்துறை நிலையங்கள், விசேட அதிரடிப்படை முகாம்கள் மற்றும் விசேட காவல்துறை பிரிவுகள் என்பனவற்றிலும் அஞ்சல் மூல வாக்களிப்பைப் பதிவு செய்ய முடியும்.

அத்துடன் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு 712,321 அரச ஊழியர்கள் தகுதிபெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்பு இன்று முதல் ஆரம்பம் | Postal Voting Begins Today

நாளை மற்றும் நாளை மறுதினம் முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் அஞ்சல் மூல வாக்குகளைப் பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனிடையே, அஞ்சல் மூல வாக்குகளைக் குறித்த தினங்களில் செலுத்த முடியாதவர்களுக்கு செப்டம்பர் 11 மற்றும் 12ஆம் திகதிகள் வாக்களிக்க மேலதிக தினங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், அலுவலக அடையாள அட்டையைப் பயன்படுத்தி எவரேனும் வாக்களிக்கச் சென்றால், அஞ்சல் மூல வாக்களிப்பைக் கண்காணிக்கும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியினால் நியமிக்கப்பட்ட அதிகாரி ஒருவர் குறித்த வாக்காளரின் ஆள் அடையாளத்தை உறுதி செய்வதற்கான செயற்பாடு முன்னெடுக்கப்படும்.

அவ்வாறில்லாத சந்தர்ப்பத்தில், அலுவலக அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்களிப்பதற்கான வாய்ப்பை வழங்க வேண்டாம் என சகல தேர்தல் தெரிவித்தாட்சி அதிகாரிகளை, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.