தமிழர்களின் இருப்புக்காகவும் தேசியத்திற்காகவும் போராடும் கட்சிக்கு வாக்களியுங்கள் – மறத்தமிழர் கட்சி

தமிழர்களின் இருப்புக்காகவும் தேசியத்திற்காகவும் போராடும் கட்சிக்கு வாக்களியுங்கள் – மறத்தமிழர் கட்சி

தமிழ் மக்களின் இருப்புக்காகவும் தமிழ் தேசியத்திற்காகவும் போராடும் கட்சிக்கு வாக்களிக்குமாறும் அவ்வாறான கட்சிக்கே தமது ஆதரவு எனவும் மறத்தமிழர் கட்சி அறிவித்துள்ளது.

மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மறத்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வேலப்பு அன்பழகன், தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்காலத்தில் புனரமைக்கப்பட்டு முன்கொண்டு செல்லப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில், ஆண்டாண்டு காலமாக அரசியல் வழியில் ஏமாற்றப்பட்டு அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார வளர்ச்சியை இழந்து சகலவிதமான உரிமைகளையும் இழந்து கலை, கலாசாரம், பண்பாடு, நாகரீகம், வளம் என அனைத்தையும் பறிகொடுத்து பரிதவித்துக் கொண்டிருக்கின்ற பரிதாபத்திற்குரிய மக்களாக நாம் நின்றுகொண்டிருக்கின்றோம்.

ஐக்கிய நாடுகள் சபை என்பது உலக ஜனநாயகத்தின் கட்டமைப்பாகும். உலகின் அனைத்து இனமக்களும் சமமான ஜனநாயக உரிமைகளுடன் வாழ்வதற்கும் பெற்றுக்கொள்வதற்கும் இந்த அமைப்பே வழிகாட்டுகின்றது.

இலங்கையில் வாழுகின்ற தமிழர்களாகிய நாங்கள் இலங்கை நாட்டின் தனித்துவமான பூர்வீக இனமாவோம். தனித்துவமாக மொழி, கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை தன்னகத்தே கொண்ட தேசிய இனமாவோம். ஆனால் தமிழினம் ஜனநாயக உரிமையை பெற்றுக்கொள்வதற்காக கடந்த 72ஆண்டுகளாக அகிம்சை வழியிலும் உயரிய ஜனநாயக வழியிலும் போராடினார்கள்.

ஆனால் தொடர்ந்தும் எம் இனத்திற்கான உரிமைகள் மறுக்கப்பட்டுக்கொண்டே வருகின்றது. இலங்கை அரசியலமைப்பின்படி தமிழினம் சிறுபான்மைத் தமிழர்களாகவே அடையாளப் படுத்தப்படுகின்றனர். இது ஐக்கிய நாடுகள் சபையின் ஜனநாயகக் கொள்கைக்கு முற்றிலும் முரணானது. அதிகாரப் பரவலாக்கலற்று காணப்படுகின்றது.

இலங்கை பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கு முரணான சட்டங்களை உருவாக்கும்போது அந்த சட்டங்களை எதிர்க்கவோ அல்லது மாற்றங்களை கொண்டுவரவோ அதிகார வலிமையற்ற இனமாக ஐநாவின் மனித உரிமைகளுக்கு முரணான உரிமையற்ற இனமாக நாம் காணப்படுகிறோம்.

அபிவிருத்தி, நமது மொழி, கலை, கலாசாரம் , பண்பாடு, நாகரீகம், நிலம், வளம் என அனைத்தையும ; கட்டிக்காக்கின்ற ஒரு தூய அரசியலை முன்னெடுக்க கட்சிகள் முன்வரவேண்டும் என்கின்ற கோரிக்கையை இந்த அறிக்கையின் மூலம் மறத்தமிழர் கட்சியாகிய நாம் முன்வைக்கின்றோம்.

தமிழ் கட்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்து தமிழ் மக்களின் வாக்குகள ;சிதைவடைந்து தமிழ் மக்களுக்கான தனித்துவம் இழந்து போவதை மறத்தமிழர்கட்சி என்றுமே விரும்பவில்லை.

எமது இனத்தின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு பாராளுமன்றத் தேர்தலில் மறத்தமிழர் கட்சி போட்டியிட விரும்பவில்லை என்பதை மக்களுக்கு ஏற்கனவே தெரிவித்திருக்கின்றோம்” என கூறினார்.