
கொரோனா வைரஸ் தொற்று பரவல் அபாயநிலை தொடர்ந்தும் நீடிப்பு!
கொரோனா தொற்றாளர்களை கண்டறிவதற்கான பி.சி. ஆர் சோதனைகளை இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று பரவல் அபாயநிலை தொடர்ந்தும் நீடிப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பொலன்னறுவை லங்காபுர பகுதியில் 300 பேர் உள்ளடங்கலாக ஹிங்குராகொட பகுதியில் உள்ள 58 பேர் பி.சி ஆர் சோதனைகளுக்குட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பி.சி. ஆர் சோதனைகள் முன்னெடுக்கபட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே பொலன்னறுவை லங்காபுர பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து குறித்த நபருடன் தொடர்புடையவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.பரிசோதனைகளில் மற்றுமொரு நபர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 815 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 413 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இதேவேளை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 391 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.