
தேர்தல் ஆணையாளர் பொதுத்தேர்தல் குறித்து விடுத்துள்ள விசேட அறிவிப்பு!
பொதுத்தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் வாக்கு எண்ணும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் வரை கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளுக்கமைய வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷபிரிய தெரிவித்துள்ளார்
இதற்கமைய வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை பொதுத் தேர்தல் வாக்குகள் எண்ணும் நடவடிக்கை தேர்தல் முடிவடைந்த மறு தினம் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய வாக்குப்பெட்டிகள் அனைத்தும் முறையாக பூட்டப்பட்டு கடுமையான பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் 6 ஆம் திகதி வாக்கு எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கும் வரை வாக்குப் பெட்டிகள் வைக்கப்படவுள்ள மத்திய நிலையங்களுக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு கடந்த கால தேர்தல்களில் செயற்படுத்தப்பட்ட விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் புதிய நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷபிரிய தெரிவித்துள்ளார்
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு வாக்களிப்பதற்காக நேரம் ஒதுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மக்கள், கொரோனா வைரஸ் அச்சத்தை விடுத்து தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் முறையாக பயன்படுத்துமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது