யாழில் நோயாளிகளுக்கு நேர்ந்த நிலை... அம்பியூலன்ஸ் வீடு திரும்பிய ஊழியர்! வெளியான பின்னணி
அவசர நோயாளர் காவு வாகனத்தில் வீடு திரும்புவதற்காக, மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நோயாளர்களை அலைக்கழித்து காக்க வைக்கப்பட்ட சம்பவம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்கு யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர்களினால் பரிந்துரைக்கப்பட்ட நோயாளர்கள் சுமார் 2 மணி நேரம் அலைக்கழிக்கப்பட்டு காக்கவைக்கப்பட்டே அவசர நோயாளர் காவு வாகனத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட 4 நோயாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (02) அவர்கள் சிகிச்சை பெற்றுவந்த விடுதிகளில் இருந்து சக்கர நாற்காலிகளில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு இயங்கும் புதிய கட்டிடத்தின் கீழ் தளத்திற்கு மாலை 2 மணியளவில் கொண்டுவரப்பட்டிருந்தனர்.
இருதய பாதிப்பு காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் அம்பியூலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த நிலையில் மற்றைய நோயாளர்களும் அதில் ஏற்றப்பட்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் இருதய நோயாளி தவிர்ந்த ஏனைய நோயாளர்கள் அவசரமாக அதிலிருந்து இறக்கப்பட்டனர்.
மருந்து குடித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற இளம் யுவதி ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உடனடியாகவே அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட வேண்டியிருந்ததால் அவ்வாறு அவர்கள் இறக்கப்பட்டதற்கான காரணம் அங்கிருந்த ஊழியர்களினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், மற்றைய அம்பியூலன்ஸ் வந்து கொண்டிருப்பதாகவும் வந்த உடன் அதில் ஏற்றி அனுப்பிவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றைய அம்பியூலன்ஸ் வண்டி உடனடியாகவே வந்திருந்த போதிலும் காக்கவைக்கப்பட்ட நோயாளர்களை விடுதிக்கு அழைத்து சென்று விடுமாறும் மாலை 4 மணிக்கு பின்னரே அம்பியூலன்ஸ் புறப்படும் எனவும் அம்பியூலன்ஸில் நோயாளர்களை அனுப்பும் விடயத்திற்கு பொறுப்பான சிற்றூழியரான பெண் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஏனைய சிற்றூழியர்கள் அதிருப்தியை வெளிக்காட்ட முடியாது புறுபுறுத்தவாறே நோயாளர்களை விடுதிக்கு கொண்டு சென்றிருந்தனர்.
இந்த நிலையில் திடீரென உடனடியாக நோயாளர்களை பழைய வெளிநோயாளர் பிரிவு வாசல் பகுதிக்கு கொண்டு வருமாறு சிற்றூழியர்களுக்கு அறிவுறுத்தல் வந்துள்ளது.
இதையடுத்து 06 ஆம் இலக்க விடுதியில் இருந்த நோயாளியை மீண்டும் சக்கர நாற்காலி மூலமாக அழைத்துச் சென்று அம்பியூலன்சில் ஏற்றிய நிலையில் புதிய கட்டிட பகுதியில் வைத்து ஏனைய இரு நோயாளிகளும் அன்று பிற்பகல் 03.30 மணியளவில் ஏற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறு ஏற்றப்பட்ட போதிலும் அம்பியூலன்ஸ் புறப்படாது காத்திருந்துள்ளது.
ஏற்கனவே ஒரு அம்பியூலன்சில் ஏற்றி இறக்கப்பட்டதுடன் மீளவும் விடுதிக்கு அழைத்துச் சென்று அலைக்கழித்த நிலையில் அவதியுற்ற நோயளிகள் மேலும் ஏற்பட்ட காலதாமத்தினால் அதிருப்தியடைந்து,
அம்பியூலன்ஸ் சாரதியிடம் தாமதத்திற்கான காரணத்தை வினவியபோது கடும் தொனியில் அதிருப்தியுடன் 'இதோ வாறா.. அவவிடமே கேளுங்கள்' என்பதாக அம்பியூலன்சில் சாதாரண உடையில் ஏறிய பெண்ணை காட்டி கூறியிருந்தார்.
இதேவேளை, அவர்கள் ஏதோ கேக்கினம் அதுக்கு பதில் சொல்லுங்கோ அதுக்கு பிறகு எடுக்கிறன் என குறித்த பெண்ணிடம் சாரதி தெரிவித்திருந்தார்.
குறித்த பெண் எதுவும் நடக்காதவர் போன்று அமைதியாக இருக்க சுமார் 4 மணியை நெருங்கும் நேரத்தில் அம்பியுலன்ஸ் புறப்பட்டது.
சாதாரண உடையில் தாமதமாக வந்து ஏறிய அம்பியூலன்ஸில் நோயாளர்களை அனுப்பும் விடயத்திற்கு பொறுப்பான சிற்றூழியரான பெண் உத்தியோகத்தரை புத்தூர் சந்திக்கு அண்மித்த பகுதியில் இறக்கிவிட்டுவிட்டு நோயாளர்களுடன் யாழ் போதனா வைத்தியசாலை நோக்கி பயணித்தது அம்பியூலன்ஸ்.
அம்பியூலன்ஸில் நோயாளர்களை அனுப்பும் விடயத்திற்கு பொறுப்பான சிற்றூழியரான குறித்த பெண் ஊழியர் தனது கடமை நேரம் முடிந்த பின்னர் அம்பியூலன்சிலேயே வீடு திரும்பும் நோக்கிலேயே மதியம் 2.30 மணிக்கு அனுப்பவேண்டிய நோயாளர்களை 4.00 மணி வரை காத்திருக்க வைத்து அலைக்கழித்துள்ளார் என்பதும் அம்பலமாகியுள்ளது.
தனது சொந்த தேவைக்காக நோயாளர்களை காக்கவைத்து அலைக்கழித்துள்ளதுடன் அம்பியூலன்ஸ் வண்டியில் வீடு திரும்பியுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாத செய்றபாடுகளாகும்.
இவ் விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இவ்வாறான தவறுகள் மீளவும் நடைபெறாதென்பதனை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.